ஒருவன் எந்தக் காரியத்தில் ஈடுபட நினைத்தாலும்..முயற்சியும், அச்செயலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையும் வேண்டும்.
இவை இரண்டுடன் நாம் உழைத்து..முடிவை இறைவனிடம் விட்டு விடுவோமாக. இறைவன் கை விட மாட்டான்.
ஒரு சிறு கதையினைப் பார்ப்போம்..
கருவுற்ற மான் ஒன்று குட்டி போட வேண்டிய தருணம்.
அது, அதற்கான இடத்தைத் தேடி காட்டில் அலைந்தது.அப்போது ஒரு அடர்ந்த புல்வெளியினைக் கண்டது.அதன் அருகே ஒரு ஆறு.இதுதான் சரியான இடம் என நினைத்தது.
அப்போது அங்கு கரு மேகங்கள் சூழ்ந்தன.மான் பயந்து தன் இடப்பக்கம் பார்த்தது.அங்கு ஒரு வேடன் தன் அம்பினை மானை நோக்கி குறி வைத்து நின்று கொண்டிருந்தான்.
வலப்பக்கமோ ஒரு புலி மானை நோக்கிப் பாய தயார் நிலையில் இருந்தது.
கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் அந்த சமயம் பார்த்துக் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் இறைவன் என்ன நினைக்கின்றானோ அது நடக்கட்டும் என தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது என்ன நடந்தது தெரியுமா?
மின்னல் ஒன்று வெட்டியது.
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு குறி தவறி புலியை தாக்கி அது இறந்தது.
தீவிர மழை காட்டு தீயை அழித்தது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுத்தது.
..
அந்த மானின் கவனம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
நம் செயலில் நம் கவனம் செலுத்துவோம்.
பின்நடப்பவை நல்லபடியே நடக்கும்
No comments:
Post a Comment