Saturday, October 24, 2020

கடல்


தனியாக
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
இந்த
நதிகள்தான்
ஓடி வந்து
ஒருகை ஓசையாக
அதனுடன்
சங்கமிக்கின்றன

மழையில் நனையவே
ஆசைப்படுகின்றேன்
விண்ணின்
கொடைக்கு
குடை
எதற்கு..

காலம் ஓடுகிறது
மிகப் பெரியவன் சொல்ல
நடுவனோ
சற்றே விரைந்து
செயல்பட
சிறியனோ
நிதானமாய் கடக்கின்றான்
காலக் கடிகாரத்தை

உனக்கென்ன
மலர்ந்து
மணம் விசி விட்டாய்
மொக்காய் நிற்கும் என்னை
மலர விடுவார்களா
அழித்து விடுவார்களா
பாவிகள்

மழையும்..மனிதனும்..
------------------------------
மழை
பெய்து கொண்டிருக்கிறது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
நொறுக்குத் தீனியுடன்..
பாழாய்ப்போன மழை
வெளியே செல்ல இயலவில்லை
என்கின்றேன்..
தொலைபேசியில் அழைப்பவனிடம்..
நல்லது செய்யும்
மனிதன் மட்டுமல்ல
மழையும்
சபிக்கப்படும் போல.

பெண்களை வர்ணித்தே
கவிதை எழுதப்படுகிறதாம்
கவிஞர்களால்....
வேறு என்ன செய்ய
மாற்றி எழுதினால்
அவனா நீ
என்கிறீர்களே

இதழ்கள்
முத்தத்திற்குக் காத்திருந்தாலும்
தேனை மட்டுமே உறிஞ்சி
பறக்கிறது
வண்டினம்

கலாமும், கனவும்
--------------------------------------
இத் தரணியில்
இளைஞர்களை
நல் கனவுக் காணச் சொன்னார்
நமது கலாம் எனும் மகான்...
கண்ட கனவை
நனவில் நிறைவேற்றிட
நாளும் உழைத்திடுவீர் என்றிட்டார்....
செய்யும் தொழிலில் நேர்மையாய் இருந்திட்டால்
செய்ய வேண்டாம்
கையூட்டு அதிகாரிகளுக்கு சல்யூட்டு
இலட்சிய நாயகன் சொன்னார்....
இனிய வார்த்தைகளில்
விதைத்துவிட்டு சென்றிட்டார் கனவுகளை
வளரும் இளைஞர் மனதில்...
நாளை அவை..
நாளும் வளர்ந்து
அறுவடைக்கு தயாராயிடும்
அன்னை நாடு சிறந்திட...
வாழ்க எம் கலாம் புகழ்
வையகம் இருந்திடும் வரை

கவிதைக்கான
கருவினைத் தேடி
கவிஞனே அலையாதே!
இயற்கை என்னிடம்
இல்லா
கவிதைக் கருவா
உனக்கு
வெளியே கிட்டிடும்


நாட்கள்
நகர்ந்து
கொண்டுதான் உள்ளன
சில
நட்புகளின்
இழப்புகளுடன்

அவர்
நாண
நன்னயஞ் செய்து விட்டாலும்
கண்ணாடியில் விழுந்த
விரிசலாகவே உள்ளது
நட்பு..


அழகிய கண்ணே..
----------------
இதயத்தின் வாசல் அது
இன்பமாய் வரவேற்றிடும்..
காந்தமாய்
கவர்ந்திழுக்கும்..
கவிஞனாய்
கவிதை பேசும்...
கதாசிரியனாய்
கதைபலக் கூறும்..
நடிகனாய்
நவரசமும்
நன்குக் காட்டிடும்...
தூண்டில் போட்டு
தூய மனதினையும்
தூண்டில் புழுவாக்கிடும்..
சாதித்திடும் அனைத்தையும்
தன் கண்ணீரினால்

சக பயணிகள் அவ்வப்போது
இறங்குகிறார்கள் - நானோ
இறங்க வேண்டிய இடம்
எப்போது வரும்
எனத் தெரியாமல்..
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...


மண்ணில் கிடந்தது நேற்றைய சருகு
மரத்தில் இன்று துளிர்த்த இலை
அதனைக் கண்டு கண்ணீர் விட்டது
தாயின் சோகத்திலும் சற்று மகிழ்ச்சி
தாண்டவமாடியது சற்று.
தாயின் ஆட்டத்தில்
சருகு மறைந்தது.

கூண்டுக்குள் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
சிறிது சிறிதாக
சிறகுகள்
முளைத்துக் கொண்டிருக்கின்றன
கூண்டைவிட்டு
வெளியேறச் சொல்லி
படபடக்கின்றன

No comments: