Sunday, February 9, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 38

இல்வாழ்வானின் ஐந்து கடமைகளை சென்ற பதிவில் பார்த்தோம்.

அதைத் தவிர அவ்னுக்கு மேலும் ஆறு கடமைகள் உள்ளதாக வள்ளுவர் கூறுகிறார்.

அவற்றை என்ன என்று பார்ப்போம்.

பெற்றோர், வாழ்க்கைத் துணை,குழந்தைகள் என இயற்கையாய் அமைந்திடும் மூவருக்கும்..எக்காலத்தும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

இதையே

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)

என்கிறார்.

அடுத்து கடமைகள்..

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை (42)

என்கிறார்.

 பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

ஆக மொத்தம் இல்வாழ்வாழ்வானின் கடமைகள் பதினொன்றாகும்.

Saturday, February 8, 2020

செவிக்கு உணவு நம் தமிழ் - 2

மரங்கள் பற்றியும், அவற்றின் பயன்கள் குறித்தும் ஒருவர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இல்லை.

மரத்திற்கும் உயிர் உண்டு.அவை நம் உறவுபோல என்று நற்றிணைப் பாடல் ஒன்று சொல்வதைக் காண்போம்.

தலைவன், தலைவி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இருவரும் ஓடி ஆடி களைப்பு மிகுதியால் ஒரு புன்னை மரத்தடிக்கு வருகிறார்கள்.

அப்போது அவன், அவளிடம் முத்தம் ஒன்று கேட்கிறான்.அவள் சொல்கிறாள்

.


அவள் சொல்கிறாள்



விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,
'நெய் பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினாள்,புன்னையது நலனே-

அம்ம! நாணுதும் நும்மோடு நகையே,
விருந்தின் பணர் விளர் இசை கடுப்ப,
வலம்புரி வாங்கோடு நரலும் இலங்கு நீர்த்
துறை கெழு கொண்க! நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே

(விதையை) என்னோடு விளையாடும் தோழிகளோடு, வெள்ளை மணலில் அழுத்தி மறந்து விட்டோம்..துறந்தும் விட்டோம்.விதை முளைவிட்டு, கிளை விட்டு பெரிதாகி, நெய் ஊற்றி, சுவையான பால் இட்டு..சிறப்பாக வளர்ந்து வரும் போது..உன்னைவிட சிறந்தவள்
,உன் தமக்கை ஆகும் என்று  அந்த புன்னை மரத்து சிறப்பை புனைந்துரைத்தாள் அம்மா.உன்னோடு சிரித்து மகிழ்ந்து இங்கே இருப்பது எனக்கு வெட்கமாய் இருக்கிறது..விருந்தாக வந்த பாணன்மெல்லிய இனிய இசை போல வலம்புரி சங்கு இசைக்கும் வானம் போல வெளுத்த  நீரை உடைய நிலத்தின் தலைவனே அறிந்து கொள்.!

நீ சம்மதித்தால், நாம் இன்புற நிறைந்த நிழல் தரும் மரங்கள் இங்கு நிறையவே இருக்கின்றன..(அங்கு செல்வோம்..என் கிறாள்)

(புன்னை மரத்தை தங்கையாய் நினைக்கிறாள் இப்பெண்) 




வள்ளுவத்தில் இருந்து தினம் ஒரு தகவல் - 37


கீழே கொடுத்துள்ள குறளில் இல்வாழ்வானின் ஐந்து கடமைகளைப் பற்றிச் சொல்கிறார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை (943)

அவை என்ன

தென்திசையில் உள்ளவர்கள்,தெய்வம்,விருந்தினர்,சுற்றத்தார்,தான் என்று ஆகிய ஐந்து வகையிலும் காப்பது தலையாய கடமை 
என்று பொருள் தருகிறது இக்குறள்.

இன்னும் சரியாக புரியவில்லை அல்லவா..

கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போம்..



தென் புலத்தார் என்றால் பித்ரு தேவதைகள்.பித்ரு தேவதைகள் என்று சில தேவதைகள் இருக்கின்றன. இவர்களின் வேலை, முன்னோருக்கு நாம் செய்யும் சிரார்த்தம் போன்ற பூஜைகளின் பலனை  நம் முன்னோரிடம் கொண்டு சேர்ப்பது,என்று இந்து மதம் சொல்கிறது.இவர்கள் தென்திசையில் இருப்பார்கள் என்றும் ஒரு நம்பிக்கை.இல்வாழ்வான், இந்த பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாக செய்ய வேண்டும்.

அடுத்தது, "தெய்வம்".

குல தெய்வத்துக்கு செய்ய வேண்டிய கடன்களை செய்ய வேண்டும்.

அதனால் பல நன்மைகள் வந்து சேரும் என்கிறார்கள்.இதுவும் நம்பிக்கை.

அடுத்தது "விருந்தினர்".


அடுத்தது, "சுற்றம்". அது பற்றி ரொம்ப சொல்ல வேண்டாம்.

கடைசியில் 

"தான்" என்கிறார்.

நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும். 
அதையும் இல் வாழ்வான் கடமையுள் ஒன்று என்கிறார் வள்ளுவர்.

இந்த ஐந்து கடமைகள் தவிர்த்து"இல்வாழ்க்கை" அதிகாரத்தில் மேலும் ஆறு கடமைகளை இரு குறள்கள் மூலம் சொல்கிறார்.அவை அடுத்த பதிவில்.

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 36

பெருமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.

மற்றவர்களைவிட பணத்தில் , அறிவில்,சமுதாயத்தில் சிறந்து விளங்கும் ஆசை அனைவரிடமும் உள்ளது. 


ஆனால், எப்படி அந்தப்  பெருமையை பெறுவது? அதற்கு என்ன வழி?

முதலில், ஒருமை மகளிர் பற்றி நாம் அறிந்து கொள்வோம்

திருமணம் ஆன பின், கணவன் எப்படி இருந்தாலும், பெண்கள் அவனை விட்டு விட்டு இன்னொருவனை மணந்து கொள்ள விரும்புவதில்லை. 

கணவன்  எப்படி இருந்தாலும், வ்ட்டுக் கொடுத்துப் பேச மாட்டார்கள். அவனை விட்டு விட்டு இன்னொருவனை மனதில் நினைக்க மாட்டார்கள். அதுவே கற்பு என்று கூறப் படுகிறது. நமக்கு இவன் தான் என்பதில் மிக உறுதியாக இருப்பார்கள்.

அவர்களை வள்ளுவர் "ஒருமை மகளிர்" என்கிறார். ஒன்றைத் தவிர வேறு எதையும் நினைக்க மாட்டார்கள்.

அது போல, பெருமை வேண்டுபவர்கள், கொண்ட குறிக்கோளில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தத் துறையை எடுத்தாலும், அதில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் இருந்து மாறக் கூடாது. ஒன்றை செய்யும் போதே, மனம் அதை விட்டு விட்டு இன்னொன்றுக்குத் தாவ விடக் கூடாது.

இதையே..

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு (974)

தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும், பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.



(பெருமையை அடைய கொண்ட குறிக்கோளில், ஒழுக்கமான வழியில் இருந்து மாறக் கூடாது.

எவ்வளவு துன்பம் வந்தாலும், கற்புடைய மகளிர் எப்படி தங்கள் கணவனை , அவன் எப்படி இருந்தாலும் விட மாட்டார்களோ, அது போல குறிக்கோளை விடக் கூடாது).

Friday, February 7, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 35



தீயதை சொல்லக்கூடாது என்று சொல்வார்கள்/

ஆனால், வள்ளுவர் சொல்கிறார்..

தீயதை சொன்னால் கூடப்  பரவாயில்லையாம்.ஆனால்,பயனில்லா சொற்களை சொல்லாமல் இருப்பது நல்லது என்கிறார்,

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று. (197)

தீயவை என வள்ளுவர் நேரடியாக சொல்லாவிடினும், நலம் பயக்கா சொற்கள் என்கிறார்.

சான்றோருக்கு வள்ளுவர் உரைப்பது போல குறளைப் படியுங்கள்..(அதாவது சான்றோருக்கு அடுத்து ஒரு கமா போட்டுப் பாருங்கள்)

சான்றோர் எப்போதும் நல்ல பயனுள்ள இனிமையான விஷயங்களையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை, கசப்பான விஷயங்களைக் கூட நன்மையைக் கருதிக் கூறலாம்.ஆனால்,பயனில்லா விஷய்ங்களைச் சொல்லக் கூடாது என்று பொருள் கொள்ளலாம்.(பரிமேல் அழகர் உரைப்படி)

பயனில சொல்லாமை அதிகாரத்தில் மேலும் அவர் சொல்லும் குறள்களின் பொருள்களையும் காண்போமாக..

பயனற்ற சொற்களைக் கூறுபவர்களை..அனைவரும் இகழ்ந்துரைப்பார்கள்.

பயனளிக்காத சொற்களை விடுத்து மனதில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

நாமும் பேசும்போது இனி பயனுள்ள சொற்களை மட்டுமே பேசுவோமாக!





Thursday, February 6, 2020

செவிக்குணவு நம் தமிழ் - 1 (புதுத்தொடர்)


எருமை.

மந்த புத்திக் கொண்டது

வெயில் என்றாலும் விரையாது

மழை வந்தாலும் ஒதுங்காது.

என் வழி தனி வழி என்று அதன் வழி செல்லும்.

குளம் சேறானாலும் குளித்திருக்கும்

அவந்தி நாட்டிலும்  அப்படி ஒரு எருமை. 

அதற்கு ஒரு நாள் ரொம்ப பசி. 

எதை தின்னலாம் என்று சுற்றிலும் பார்த்தது. எதிரிலே ஒரு குளம். 

ஒரு குவளை மலர்.

அந்த மலரை பறித்து உண்ணலாம் என்று குளத்தில் இறங்கி மலரை வாயில் கவ்வியதாம்

அப்போது அந்த மலரில் இருந்த வண்டுகள் வெளியே தப்பி வந்து ரீங்காரமிட்டன.

அந்த ரீங்கார இசையில் மயங்கி மலரை உண்ணாமல் விட்டது அந்த எருமை.

அப்படி எருமைக்குக் கூட இசை ஞானம் இருக்கும் ஊர் அவந்தியாம்.

அந்த நாட்டின் தலைவன் இந்த மன்னன்...பெரிய யானையின் வலிமையையை கொண்டவன் இவன் என்று அவந்தி நாட்டின் மன்னனை தமயந்திக்கு அறிமுகப் படுத்துகிறாள் அவளுடைய தோழி...

பாடல்

வண்ணக் குவளை மலர் வௌவிவண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்துப் பைங்குவளை உண்ணாது
அரும்கடா நிற்கும் அவந்திநாடு ஆளும்
இரும் கடா யானை இவன்

பொருள் 

வண்ண மயமான குவளை மலரை, வாயில் கவ்வி, அந்த மலரில் இருந்த வண்டுகள் எழுப்பிய ரீங்காரமான இசை காதில் கேட்டு, அக்குவளை மலரை உண்ணாது எருமை மயங்கி நிற்கும் அவந்தி நாட்டினை ஆளும் பெரும் யானையைப் போன்ற வலிமை மிக்கவன் இவன்

வள்ளுவத்தில் தினம் ஒரு தகவல் - 34

சிரிப்பு ஒரு அருமருந்து

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்

என்றெல்லாம் சிரிப்பின் மகத்துவத்தைப் பற்றிக் கூறுவார்கள்.

இயற்கை..மனிதனுக்கு மட்டுமே சிரிப்பையும், நகைச்சுவை உணர்வையும் கொடுத்துள்ளது.

திருவள்ளுவரும்..நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை ஒரு சில குறள்கள் மூலம் சொல்லியுள்ளார்.

அவற்றில் ஒன்று..

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள் (999)

நண்பர்களுடன் சிரித்து மகிழ்ந்து பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் தெரியும்

என்கிறார்.

அதாவது, நகைச்சுவை உணர்வு அல்லாதவர்கள் என்றும் இருட்டிலேயே இருப்பவர்கள் போன்றவர்களாம்.

சிரித்து வாழ்பவர்கள் என்றும் தனித்தும் இருக்க மாட்டார்கள்.உறவும், சுற்றமும் உடன் இருக்கும்.

சிரித்து வாழ்வோமாக..



Tuesday, February 4, 2020

மண்ணுக்குள்
மண்ணாய்
மக்கச் செய்யும்
மண்தானே
சிறு விதையையும்
பிரசவித்து
மண்ணில்
மக்களுக்காக
அனுப்புகிறது

எனக்குள்
விதைக்கப்பட்ட
தமிழ் வித்து
வளர்ந்து 
ஆலமரமாய்
ஆயிரம் கவிதை
கதை
நாடகம் எனும்
விழுதுகளுடன்
என்னைத் தாங்கி
வளர்த்து
வருகிறது....
அப்போது
என்னுடல்
உடலில் ஓடும் குருதி
உயிர் அனைத்தும் 
தமிழன்றோ!

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 32

வாழ்க்கை வாழ்வதற்கே..

ஆனால் அதே நேரம்

எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பது அல்ல வாழ்கை.

நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்கத் தெரியும். அதை நல்ல வழியில் செலவழிக்கத் தெரியாது. 

நாளைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவுகளுடன் சேர்ந்து மகிழ்ந்து செலவிடக் கூட நேரம் இன்றி பொருளீட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்

எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.

இவர்களை வள்ளுவர் வாழத் தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல (337)


வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை ஒரு பொழுது கூட சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைக் கட்டிக் கொண்டிருப்பர்.

'நல்வழி"யில் இதையே ஔவை எப்படி சொல்கிறார் பாருங்கள்

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?
22


பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல்(தனக்கும் உபயோகித்துக் கொள்ளாமல்) புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டுஉங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள் 

..

Monday, February 3, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 31


நமது சங்க கால பாடல்கள் பலவற்றில் தலைவன் பொருளீட்ட சென்றுள்ளான்..என தலைவி,தோழியிடம் உரைப்பதைப் படித்துள்ளோம்.

திருக்குறளில், அதுவும், கட்டளை இடுவது போல்.பொருளீட்டுவதைப் பற்றி சொல்லியுள்ளார் வள்ளுவர் 

"பணம் சம்பாதியுங்கள், உங்கள் பகைவர்களின் செருக்கை அறுக்க அதை விட கூரிய பொருள் இல்லை" என்கிறார் வள்ளுவர்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃதனிற் கூரிய தில் (759)



பொருளீட்டுங்கள்.எதிரிகளின் இறுமாப்பை அறுக்கும் ஆயுதம் அதைவிட கூரியது எதுவும் இல்லை



எதிரிகளின் மமதை என்பது ஒரு பொருள் இல்லை, எனவே அதை எந்த ஆயுதத்தாலும் உடைக்க முடியாது.

நாம் நிறைய பொருள் சேர்த்தால், அது அவர்களின் இறுமாப்பை உடைக்கும்.

எனவே, பொருள் சேருங்கள்.

உங்களை பிடிக்காதவர்களின் வாயை அடையுங்கள்

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல்

முதலில் ஒரு சிறுகதை..

கடவுளின் மீது பக்தி கொண்ட  கழுகு ஒன்று இருந்தது.தினமும் இறைவனை தியானம் செய்யும்.

அது வானில் பறந்தபடியே  கீழே மேய்ந்துகொண்டிருக்கும்  கோழிக்குஞ்சுகள்,ஓடி ஒளியும் எலி போன்றவற்றை பார்த்து சரேலென இறங்கி.அவற்றை கொத்திக்கொண்டு போய் பசி ஆறும்.

கடந்த சில தினங்களாக அதற்கு வயதானதால் வெளியே சுற்ற முடியவில்லை.உணவுக்கு ஏதேனும் வழி கிடைக்குமா என பார்த்தது.எதுவும் கிட்டவில்லை.

ஆகவே இறைவனை தியானித்து "ஆண்டவா" என்னால்  இன்று வெளியே போக முடியவில்லை.பசி வாட்டுகிறது.எனக்கு உண்ண ஏதாவது அளியுங்கள்,என வேண்டியது.

காலை,மாலை போய் இரவும் வந்தது.அதற்கு எதுவும் கிட்டவில்லை அதனால் இறைவன் மீது கோபமுற்று "இவ்வளவு நாள் உன்னை வேண்டிய உன் பக்தனுக்கு ஒரு வேளை உணவைக்கூட அளிக்காத இரக்கமற்றவனா நீ" என அரற்றியது.

இறைவன் அதன் முன் தோன்றி." கழுகே நீ காலையில் என்னை வேண்டியபோதே உனக்கான உணவைக் கொடுத்துவிட்டேன்,சற்று திரும்பிப்பார்" என்றார்.

கழுகு திரும்பி பார்க்க ஒரு செத்த எலி  கிடந்தது.' நான் உனக்கு உணவினை கொடுத்தாலும் அதற்கான சிறு முயற்சியாவது நீ செய்யவேண்டும்.நீ அப்படி முயலாதது உன் தவறு' என்று கூறி மறைந்தார்.


இனி...

நம்மில் பலர்.. அந்த கழுகின் நிலையில்தான் இருக்கிறோம்.

நமக்கு என்ன தேவையோ அது அந்த ஆண்டவனுக்குத் தெரியும்? என எந்த ஒரு செயலிலும் முயற்சி செய்யாமல் இருக்கிறோம்.

பக்கத்திலேயே நாம் வேண்டுவன இருந்தாலும்.

அந்த முயலாமை நமக்கு ஏமாற்றத்தைத் தர இறைவனை நிந்திக்கிறோம்.

இதிதான் வள்ளுவர் இக்குறள் மூலம் நமக்குச் சொல்கிறார்.


இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும் (1040)

நமக்கு அதிர்ஷடமில்லை, வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு (முயலாமல்) சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புன்னகை செய்வாள்

(நமக்குத் தேவையானவற்றை  இறைவன் தருவான்என்றாலும்...அதை அடைய அதற்கான நம் முயற்சியும் சிறிதளவாவது இருக்கவேண்டும்)

Sunday, February 2, 2020

வள்ளுவத்தில் தினம் ஒரு தகவல் - 30

அவனுக்கு வயதாகிறது..

வயதாக..வயதாக..பலம் குறைகிறது.உடல் நோய்வாய்ப் படுகிறது.

உடலை விட்டு நோய் விலகாது வருத்துகிறது.

ஆனாலும்..வாழும் ஆசைக்கு குறைவிருக்காது.மரணத்தை விரும்பி ஏற்கமாட்டான்.

நான் சொன்ன இவை, அவனுக்குமட்டுமில்லை..

ஒவ்வொருவரின் மனநிலையும் இதுதான்.

அதுபோலத்தான் சூதாட்டமுமாம்.

முதலில் இழப்பு ஏற்படும்..அந்த இழப்பினைப் பிடிக்க மீண்டும் முயற்சிக்கச் சொல்லும்..இப்படி ஆசை நீண்டுக்கொண்டே இருக்குமாம்.

இதையே இக்குறளில் வளுவர் சொல்கிறார்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர் (940)

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வர வர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றுதான்.

எதிர்ப்பாரா எதிர்பார்ப்பு

எதிர்ப்பார்ப்புகள்
ஏமாற்றம் தருகின்றன
என்றிட்டேன்
எதிர்பாராததை
எதிர் பார்..
ஏமாற்றம் இருக்காது
என்றிட்டான்..
சுட்டப் பழம்
சுடாப்பழம்
போதித்தவன்.

Monday, January 13, 2020

செத்தும் கொடுத்த சீத்க்காதி

செத்தும் கொடுத்த
சீதக்காதிகளாய்...
மரத்திலிருந்து
உதிர்ந்த இலைகள்
மரத்தின் வேர்களில்
குவிந்து
தாய் செழிக்க
உரமாகின்றன

Sunday, January 12, 2020

உயர..உயர..

நான்
சம தளத்தில்
நின்றக்கால்
தூற்றப்பட்டேன்
உயர..உயர
தூற்றுதல்
கேட்கவில்லை..
தூற்றுவதை
விட்டு விட்டனரா
இல்லை
என் காதுகளுக்குத்தான்
எட்டவில்லையா?
நான் அறியேன்

Thursday, December 19, 2019

போராட்டத்தில்
ஈடுபட்ட
மகளை
லத்தியில் அடித்து
காயப்படுத்திய
காவலர்
காயத்திற்கு
கடையில்
கண்களில் நீருடன்
மருந்து வாங்கிச் சென்றார்.

Tuesday, December 17, 2019

கிறுக்கல் கவிதைகள்

விடியலில்
எங்கோ
ஒரு சேவல் கூவுகிறது
பால் கொணர்பவனைப்
பார்த்து
நாய் குரைக்கின்றது
கோலப்பொடியில் அமர்ந்து
காகம் கரைகிறது
கடமைகளை
மறப்பதில்லை இவை
படுக்கையில்
புரண்டபடியே
எண்ணுகின்றான் இவன்.

2
வீடுகளில்
இப்போதெல்லாம்
நிழல்கள்தான்
பேசுகின்றன..
நிஜங்களோ
வாய் மூடிக்
கேட்டுக்
கொண்டிருக்கின்றன

Monday, December 9, 2019

இருப்பதும்..இல்லாததும்

1)இருப்பது
இல்லை போலும்
இல்லாதது
இருப்பது போலும்
தோன்றுவது ஏன்?

2)இதயத்திற்கு
சிறகு முளைத்து
பறக்கின்றது

3)மண்ணுக்குள்
மண்ணாய்
மக்கச் செய்யும்
மண்தானே
சிறு விதையையும்
பிரசவித்து
மண்ணில்
மக்களுக்காக
அனுப்புகிறது

Friday, November 22, 2019

ஆதி பகவன் முதற்று உலகு
இறைவனுக்கு
 அடுத்து..
இறைவனுக்கு அடுத்தா..?
ஆம்..
அடுத்தது
அது மழையாகும்
ஆகவேதான்
வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை
அடுத்து
வான் சிறப்பை
வைத்தான்

Monday, November 4, 2019

மழை
அடித்து ஓய்ந்ததும்
மழைத்துளிகள் மீது
கோபம் வரத்தான் செய்கிறது..
யார் அனுமதியுமில்லாமல்
மரத்தின் இலைகளையும்,
பூக்களின் இதழ்களையும்
அனுமதியின்றி
முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக்
காணுகையில்..