Tuesday, February 4, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 32

வாழ்க்கை வாழ்வதற்கே..

ஆனால் அதே நேரம்

எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பது அல்ல வாழ்கை.

நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்கத் தெரியும். அதை நல்ல வழியில் செலவழிக்கத் தெரியாது. 

நாளைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவுகளுடன் சேர்ந்து மகிழ்ந்து செலவிடக் கூட நேரம் இன்றி பொருளீட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்

எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.

இவர்களை வள்ளுவர் வாழத் தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல (337)


வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளை ஒரு பொழுது கூட சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைக் கட்டிக் கொண்டிருப்பர்.

'நல்வழி"யில் இதையே ஔவை எப்படி சொல்கிறார் பாருங்கள்

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?
22


பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல்(தனக்கும் உபயோகித்துக் கொள்ளாமல்) புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டுஉங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள் 

..

No comments: