Friday, July 20, 2018

நாடகப்பணியில் நான் - 10

"youngsters Cultural Association" என்ற எங்களது Association ன் தூண்களில் மூன்று தூண்கள் விட்டுவிட்டு சென்றுவிட்டதும், எஞ்சியிருந்த ஒரேதூணான என்னால் தொடர்ந்து நடத்தமுடியா நிலையில் அக்குழு தானாகவே மடிந்தது.

பின் சில காலம் நானும் என் அலுவலகம் உண்டு வீடு உண்டு என இருந்து விட்டேன்.

ஆனால் அவ்வப்போது நாடகத்தின் மீதான என் ஆர்வம் தலைதூக்கும்.அந்த ஆர்வம் ஒரு சபாவை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த, சில நண்பர்கள் உதவியுடன் , வீடு வீடாக சென்று வருடம் 150 ரூபாய் சந்தா.வருடம் 15 நிகழ்ச்சிகள் உத்தரவாதம் எனக் கூறி அங்கத்தினர்களைச் சேர்த்தேன்.

அம்பத்தூர் டி ஐ சைக்கிள் நிறுவனத்தில் personnel Manager ஆக இருந்த திரு எஸ்.பஞ்சாபகேசன் அவர்களைத் தலைவராகக் கொண்டும், என்னை செகரட்டரி ஆகக் கொண்டும் ஆகஸ்ட் 1973ஆம் நாள் அம்பத்தூர் கல்சுரல் அகடெமி என்ற பெயரில் சபாவின் துவக்கவிழா நடந்தது.

அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதியாய் இருந்த மாண்புமிகு சதாசிவம் அவர்கள் தலைமையில், நடிகர் வி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சபா தொடங்கியது.

பொதுவாக ஏ ஜிஸ் ஆஃபீஸ், தலைமைச் செயலகம், வங்கிகள் ஆகியவற்றில் வேலை செய்துவருபவர்களே பெரும்பாலும் நாடகக் கலைஞர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.அப்படி ரிசர்வ் வங்கியில் வேலை செய்து வந்த ஒருவர் கீதா ஸ்டேஜ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார்.அவர் "கல்யாணத்தில் கலாட்டா" என்ற நாடகத்தை நடத்தி வந்தார்.
அவர் அனைவராலும் ராது என அறியப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் ஆவார்.

அவரது "கல்யாணத்தில் கலாட்டா" நாடகம் எங்களது முதல் நாடகமாக அமைந்தது.அந்நாடகத்திற்கு நான் அளித்த சன்மானம் ரூ 450/-

அன்று எனக்கும் ராதுவிற்கும் ஏற்பட்ட நட்பு அவரின் இறுதி நாட்கள் வரை நீடித்தது.

அடுத்து சபா நிகழ்ச்சிகளும், அதன் மூலம் எனக்கு தெரியவந்த பிரபலங்கள் பற்றியும் இனி வரும் பதிவுகளில்.

(தொடரும்)   

No comments: