Thursday, July 12, 2018

நாடகப்பணியில் நான் - 4

?

தளர்த்தப்பட்ட நிபந்தனை..

நான் படித்து முடிக்கும் வரை நாடகம், ஒத்திகை என அலையக் கூடாது.
வேண்டுமானால், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறையில் பள்ளி நண்பர்களுடன் ஏதேனும் நாடகமோ, விளையாட்டோ வீட்டின் எல்லைக்குள்ளேயே செய்து கொள்ளலாம் என்பதே அது

எங்கள் வீடு ஓட்டு வீடு.ஆனால் நீளமான திண்ணை உண்டு

இந்த நிபந்தனைகள் எனக்கு வெல்லமாக அமைந்தது

முதலில், "கலைவாணி" என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி ஒன்றைத் துவக்கினேன்.அதில், நானும், பள்ளி நண்பர்களும் கதை எழுதினோம்.படங்களை நானே வரைந்தேன்

பின்னர் அதில் நான் எழுதிய "விருந்து" காட்டில் தீபாவளி ஆகிய கதைகளை நாடகமாக திண்ணையில் போட்டோம்

என் தந்தையின் வேட்டியே முன் திரை.காட்சிகளுக்கு எங்களது போர்வைகளும், அக்காளின் தாவணிகளும் உபயோகப்பட்டன

சணல் கயிற்றை, திண்ணையின் அகலத்துக்குக் கட்டி   திரையும் ,காட்சிகளும் அமைத்தோம்.

பின்னர், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்.அட்டையை வெட்டி கிரீடமும், வாளும் தயாரிக்கப் பட்டன.ஒட்டுவத்ற்கு சரிகைப் பேப்பர் வேண்டுமே...என்ன செய்வது என யோசித்தோம்.அப்போதெல்லாம் கிளிக்கூண்டு போன்றவை செய்ய காலி சிகரெட் பெட்டிகளை சேமித்து செய்வோம்.அதுவே இப்போது பயன் பட்டது.அந்த நாளில் சிகரெட் பாக்கெட்டுகளில், சரிகைப் பேப்பரில் வைத்துதான் சிகரெட்டுகள் வரும்

அந்த சரிகைப் பேப்பரை பெட்டிக் கடைகளில் கெஞ்சி வாங்கி வந்து வெட்டி ஒட்டி கிரீடம், வாள் தயார்  செய்தோம்

நாடகம் அரங்கேறியது.பார்வையாளர்கள் நண்பர்களும், நண்பர்களின் சகோதர, சகோதரிகளும் தான்.

அதன் பிறகு..நாடகங்கள் போட தமிழாசிரியர் போதித்த செய்யுள்கள் உதவின.

தமயந்தி சுயம்வரம் (நாற்குணமும் நாற்படையா பாடல்)
கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திற்கு கண் கொடுத்தல் (பேறினி இதன் மேல் உண்டோ.செய்யுள்).ஒரு நண்பன் சிவ லிங்கமாய் உட்கார்ந்து கொள்ள, அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி வந்த குங்குமத்தை தண்ணீரில் கரைத்து கன்னங்களில் வழியவிட்டு ,கண்ணப்பன் கண் கொடுக்கும் காட்சியை நாடகமாக்கினோம்

இப்படி மாதம் ஒரு நாடகம் போட்டோம்.

பள்ளி இறுதியாண்டு முடிக்கும் வரை இந்நிலையே நீடித்தது.

(தொடரும்)


No comments: