தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு மிகக் மிகக் குறைவான தொகுதிகளையே தர அதிமுக முன் வந்துள்ளது. இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.
ஆனால், அதைவிட அவர்களை மிக மிக கோபம் கொள்ள வைத்தது ஜெயலலிதாவின் சந்தர்ப்பாதம் தான் என்கிறார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சண்டை வந்தவுடன், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே ஜெயலலிதா நிறுத்தி வைத்ததை வைகோவும் இடதுசாரிகளும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கேவலமாகக் கருதுகின்றனர்.
ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் சொல்படி, இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரசோடு கூட்டணி சேர அதிமுக முடிவு செய்து டெல்லியில் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆ'சாமி'யின் உதவியோடு அந்தக் கூட்டணிக்காக அதிமுக தீவிரமாக முயன்றது.
இதை உணர்ந்த மதிமுகவினரும், இடதுசாரிகளும் கடும் கோபத்துக்குள்ளாகினர். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானதும், இவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. இதை இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.
அதிமுக செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு மரியாதையான அளவிலான தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் வைகோ மற்றும் இடதுசாரிகளின் இப்போதைய கருத்தாக உள்ளது.
ஆனால், தேமுதிக வந்துவிட்ட தைரியத்தில் இவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். இதற்கு அவரது அட்வைசரான அந்த பத்திரிக்கையாளரே முக்கியமானதாகக் கருதப்படுகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அவருக்கு வைகோவைக் கண்டாலும் ஆகாது, இடதுசாரிகளை ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் தருவதாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. கடந்த முறை 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக இம்முறை 36 கேட்டது. பின்னர் 30, 26 என்று இறங்கி வந்தார் வைகோ.
ஆனால், அதிமுகவோ மதிமுகவுக்கு 5 சீட்டில் ஆரம்பித்து 6, 7, 8, 9 என்று போய் இப்போது 10 சீட்களிலேயே நின்று கொண்டுள்ளது. இதையடுத்து 18 தந்தால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வைகோ இப்போது இறங்கி வந்துவிட்டார். ஆனாலும் இதைக் கூடத் தர அதிமுக தயாராக இல்லாததால் தான் அவரை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இழுத்தடித்து வருகிறது என்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் 35ல் போட்டியிட்டு 6ல் தானே வென்றீர்கள். அதிலும் 3 எம்எல்ஏக்கள் உங்களுடன் இல்லையே, மக்களவைத் தேர்தலில் 4 சீட் தந்து ஒரு
இடத்தில் தான் வென்றீர்கள், இதனால் இப்போது 10 தொகுதிகள் போதாதா என்று மதிமுகவிடம் அதிமுக கேள்வி எழுப்பியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்து 184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வெறும் 61 தொகுதிகளில்தானே வென்றது. இதற்காக அதிமுக 50 மட்டும் போட்டியிடுமா என்று மதிமுக தரப்பு பதில் கேள்வி கேட்டுள்ளது.
அதிமுகவின் இந்த செயல்களால் மனம் ஒடிந்து போன வைகோ, இப்போது தனது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற போராடிக் கொண்டுள்ளார்.
முதலில் கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு தாயகத்தில் வைகோ தலைமையில் நடந்த மதிமுக அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் அனல் பறந்துள்ளது.
கூட்டத்தில் பேசிய மதிமுக தொகுதி உடன்பாட்டுக் குழு உறுப்பினரான திருப்பூர் துரைசாமி, போயஸ் கார்டன் கதவை எத்தனையோ தடவை தட்டி விட்டோம். நம்மை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா மதிக்கவில்லை. காங்கிரசோடு கூட்டு சேர சுப்பிரமணிய சாமி மூலம் ஜெயலலிதா முயற்சித்தார். இதனால் தான் ஸ்பெகட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதை சாமி நிறுத்தினார். ஜெயலலிதா ஒரு நம்பிக்கைத் துரோகி என்று பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசுகையில், நமக்கு மரியாதைக்குரிய அளவில் சீட் தரப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேற வேண்டும் பேச, அடுத்தடுத்துப் பேசியவர்கள் ஜெயலலிதாவை மிகக் கடுமையான அர்ச்சித்துள்ளனர்.
இறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான். துரோகச்செயல்களுக்கு அஞ்சாதவர் தான். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம் என்று பேசியுள்ளார்.
இந்தத் தகவல் அதிமுக தரப்புக்குக் கிடைக்க, நள்ளிரவில் மதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அவசரப்பட வேண்டாம், கம்யூனிஸ்டுகளுக்கும், உங்களுக்கும் உரிய இடங்கள் தரப்படும் என்று சமாதானம் சொன்னதோடு சரத்குமார், கார்த்திக் கட்சிகளுக்கும் அம்மா சீட் தரப் போகிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறார்கள்.
ஆனாலும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வைகோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து தனியாக 3வது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைத்து தொகுதிகளின் எண்ணிக்கையை ஜெயலலிதா அறிவிப்பார் என்று இந்தக் கட்சிகள் கருதின.
ஆனால், இதில் எந்தக் கட்சியுடனும் ஜெயலலிதா இதுவரை தொகுதி உடன்பாடு செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கடந்த திங்கள்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து டீ, வடை தந்து அனுப்பிவிட்டனர்.
அப்போது மார்க்சிஸ்டுகளுக்கு அதிகபட்சம் 11 தான் என்று அதிமுக கூறியதால் பேச்சில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
அட்லீஸ்ட் இவர்களை அதிமுக அழைத்தாவது பேசியது. ஆனால், சசிகலா மூலம் அதிமுகவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனை இன்னும் அடுத்த சுற்று பேசக் கூட அதிமுக அழைக்கவில்லை. சசிகலாவின் பேச்சு இம்முறை போயஸ் கார்டனில் எடுபடவில்லை என்றும், ஜெயலலிதாவை அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தான் வழிநடத்து வருகின்றனர் என்பதும் தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இதில் ஒருவரான அந்த பத்திரிக்கையாளர் தான் படாதபாடுபட்டு தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 சீட் தான் என்று அதிமுக தேர்தல் குழுவினர் முன்பு கூறியிருந்தனர். இப்போதும் அதே எண்ணிக்கையில் தான் அதிமுக நிற்கிறது என்கிறார்கள்.
இதனால் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்கு மதிமுக,
இடதுசாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக களத்தை சந்திக்கலாம் என்பதே இந்தக் கட்சிகளின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது. ஆனால், தா.பாண்டியன் மட்டும் பொறுத்திருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.
தனியாகக் களமிறங்கி ஓட்டுக்களைப் பிரித்து தங்களை கேவலப்படுத்தும் அதிமுகவை திமுக கூட்டணியிடம் தோற்கச் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவுக்கு பாடம் புகட்டுவதே சரி என்று மதிமுக, இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா
இந் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மதிமுக-இடதுசாரிகள் தனியாக மூன்றாவது அணி அமைக்க மாட்டார்களா என்ற நப்பாசையுடன் திமுகவும் எதிர் முகாமை பார்த்துக் கொண்டு
காத்துக் கொண்டுள்ளது. அப்படி ஒன்று நடந்தால் அது தங்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தரும் என்பது திமுகவின் கணக்கு.
இதனால் அந்தக் கூட்டணியை உடைக்க நாம் ஏதாவது செய்ய முடியுமா என்ற வியூகங்களையும் யோசித்துக் கொண்டுள்ளது திமுக.
தேமுதிக, பிற கட்சிகளுக்கு 49 இடங்கள் தந்துவிட்ட நிலையில் மீதமிருக்கும் 185 இடங்களில் மதிமுக, சிபிஎம், சிபிஐக்கு மொத்தமாக 30 இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு, கார்த்திக், சரத்குமார் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளைத் தந்துவிட்டு மீதியுள்ள 153 இடங்களில் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு உகந்த 9) போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதை மதிமுக-இடதுசாரிகள் ஏற்காவிட்டால் கூட்டணி உடைவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக 27 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் கடைசி நேரத்தில் 35 இடங்கள் தந்த அதிமுக கூட்டணிக்கு வைகோ இடம் மாறியது குறிப்பிடத்தக்கது. இம்முறை அவர் திமுக கூட்டணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதால்,
இடதுசாரிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பது ஒன்றே அவருக்குரிய ஒரே வழியாகும.
அடுத்த இரு நாட்களி்ல் தங்களுடன் உரிய தொகுதிப் பங்கீட்டை அதிமுக முடிக்காவிட்டால் மதிமுகவும் இடதுசாரிகளும் இது தொடர்பாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக 153க்குப் பதிலாக 144 தொகுதிகளை (மீண்டும் கூட்டுத் தொகை 9) எடுத்துக் கொண்டு மிச்சமுள்ள 9 தொகுதிகளை மூவருக்கும் பகிர்ந்து கொடுத்து கூட்டணியை காப்பாற்றும் முயற்சிகளில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
(நன்றி -தட்ஸ்தமிழ்)