Thursday, July 31, 2014

குறுந்தொகை - 62


தலைவன் தனக்கே சொல்லிக்கொண்டது
(இயற்கைப்புணர்ச்சிக்குப் பின் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாள் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் வாசமும், மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சிறைக்குடி யாந்தையார்

இனி பாடல்-

 
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை
   
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ
   
ஐதுதொடை மாண்ட கோதை போல
   
நறிய நல்லோண் மேனி

முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே.

                              -   சிறைக்குடி யாந்தையார்

   உரை -

காந்தள் மலரையும், அரும்பிலிருந்து உண்டாகிய செவ்விய மலர்களாகிய முல்லைப் பூக்களையும், மணக்கும் இதழ்களையுடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்தும்படி அழகிதாகத் தொடுத்த மாட்சிமைப்பட்ட மலையைப் போல நல்ல வாசத்தையுடைய தலைவியின் மேனியானது, தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது, தழுவுதற்கும் இனியது.


(கருத்து) தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.

குறுந்தொகை - 61



தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறவில்லையாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலால் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்ரும் இல்லை" என்று கூறித் தோழி அனுமதி மறுத்தது.)


மருதம் திணை - பாடலாசிரியர் தும்பிசேர்கீரன்

இனி பாடல்-

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்துஇன் புறாஅ ராயினும் கையின்

ஈர்ந்துஇன் புறூஉம் இளையோர் போல

உற்றுஇன் புறேஎ மாயினும் நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்துஇன் புற்றனெம் செறிந்தன வளையே

                                   -தும்பிசேர்கீரன்

உரை-

தச்சனால் செய்யப்பட்ட சிறு குதிரை பூட்டப்பெற்ற சிறுவண்டியை ஏறிச் செலுத்து இன்பமடையாராயினும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப் போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும், பொய்கையையும் உடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மேன்மேலும் பெருகச்செய்து இன்பம் அடைந்தோம்.அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.

(கருத்து) தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறக்கவில்லை


(மரத்தச்சன் செய்த குதிரை, மரக்குதிரையே ஆனாலும், அதனை ஓட்டும் சிறுவர்கள் அதனை உண்மையானக் குதிரை என்றே எண்ணியே ஓட்டி மகிழ்வர். நல்ல பல தேர்களையும் பல பொய்கைகளையும் கொண்ட ஊரை உடையத் தலைவனது மெய்யோடு மெய்சேர்ந்து இன்பம் பெறாவிட்டாலும், அவனுடன் மனதளவில் நான் கொண்ட காதலால் இன்பமடைந்திருக்கிறேன்.. அதனால் என்னுடைய கை வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்துவிடவில்லை..!! (தலைவனது பிரிவால் கை வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு உடல் மெலியும்... ஆனால் அது இப்போது இல்லாமல் போய்விட்டது).








Wednesday, July 30, 2014

எமக்கு என்ன ...


                               



இவனுக்கு இவள்

இவளுக்கு இவன்

பேசி நடத்தியவர்கள்

கோர்ட்டுக்கு

வருவதில்லை

விவாகரத்தின் போது


குறுந்தொகை - 60

தலைவி கூற்று

(தலைவனது பிரிவை தாங்க முடியாத  தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாமல் இருப்பினும் அவரைக் கண்டதுமே எனக்கு இன்பம் பிறக்கும்; அஃது இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்

இனி பாடல் -
 
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
   
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
   
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
   
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
5
நல்கார் நயவா ராயினும்
   
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.

                  - பரணர்

உரை -
உயர்ந்த மலையில் உள்ள குறிய அடியையுடைய கூதளஞ்செடி அசைய (அதில்) பெரிய தேனடையைக் கண்ட , காலில்லா எழுந்தும் நிற்க முடியாத முடவன், உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அத்தேனடையை பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப்போல தலைவர் என்னிடம் பேசவிரும்பாராயினும், அவரைப் பலமுறைப் பார்த்தல் என் நெஞ்சிற்கு இனிமை தரும்.

(கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.


முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாலும், அது கிடைக்காது எனினும், அதைக்கண்டளவிலே இன்பம் அடைவது போல தலைவரிம்ன் தண்ணளியையும், நயப்பையும் பெறாவிடினும் அவரைக் காண்பதே இன்பம் (என்கிறாள் தலைவி)

   

Tuesday, July 29, 2014

குறுந்தொகை - 59




தோழி கூற்று
(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை தாங்காது வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் உன்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் திரும்புவார்" என்று தோழி கூறியது.)

பாலைத்திணை - பாடலாசிரியர் மோசிகீரன்


இனி பாடல்-
 
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
   
அரலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
   
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
   
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
5
சுரம்பல விலங்கிய வரும்பொருள்
   
நிரம்பா வாகலி னீடலோ வின்றே.

                     - மோசிகீரன்

உரை-

 கண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய பறை . பாணர் முதலிய இரவலரைப் பாதுகாக்கவனது அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள அகன்றவாயையுடைய ஆழமுள்ள சுனையினிடத்து மலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும் உனது நல்ல நெற்றியை தலைவர் மறப்பாரோ?பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள் முற்றக் கை கூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீடித்து தங்குதல் இலதாகும்.ஆகவே நீ வருத்தப்படாதே!

    (கருத்து) தலைவர் விரைவில் மீளுவர்.

 

    (வி-ரை.) பதலை - ஒருகண் மாக்கிணையென்னும் பறை. பரிசிலர் கோமானென்றது பரிசிலருக்குப் பரிசில் தந்து பாதுகாக்கும் தலைவன்.

Monday, July 28, 2014

இரு நிலவுகள்

                          



பௌர்ணமி இரவு

தெளிந்த நீரோடை

கரையில் அவள்

நீரில் நிலவுகள்

களங்கத்துடன் ஒன்று

களங்கமின்றி ஒன்று

குறுந்தொகை -58




தலைவன் கூற்று
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்.

இனி பாடல்-
 
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
 
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
 
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
 
கையி லூமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெ யுணங்கல் போலப்
 
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

.                        -வெள்ளிவீதியார்

உரை-

இடித்துரைக்கும் நண்பரே! நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நல்லது.என் விருப்பமும் அதுவே! சூரிய வெயில் எறிக்கும் வெம்மையுடைய பாறையினிடத்தே , கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணையைப் போல என்னிடத்தில் உண்டான இக்காமநோய் பரவியது.பொறுத்துக் கொண்டு நீக்குதற்கு அரியதாக உள்ளது.

 (கருத்து) காமநோய் பொறுத்தற்கரியது..

வெண்ணெய் சூரிய வெப்பத்தால் உருகி பரந்ததுபோலக் காமநோய் பரந்தது,அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு கையில்லாத, வாய் பேசமுடியா ஊமை பிறரைக் கூவி அழைத்து பாதுகாக்க செய்யவும் இயலாது போல, காமநோயை அடக்கி பாதுகாக்கும் ஆற்றலை நான் பெறவில்லை.இதனைக் காக்க இயலவில்லை.
 எப்படி ஒரு உவமை சொல்லப்படுகிறது பாருங்கள்.இதுவே இப்பாடலின் சிறப்பு.

Sunday, July 27, 2014

குறுந்தொகை - 57


தலைவி கூற்று
(தாய் முதலியவர்களால் காக்கப்படும் தலைவி, தலைவனைப் பிரிந்திருத்தற்கு ஆற்றாளாகித் தோழியை நோக்கி, "தலைவரும் யானும் தனித்திருப்பினும் ஒன்றாக இருந்து ஒருங்கே உயிர் விடுதல் நன்று" என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்
   
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
   
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
   
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
   
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந்

திருவே மாகிய வுலகத்
   
தொருவே மாகிய புன்மைநா முயற்கே.

                       -சிறைக்குடியாந்தையார்

உரை-

தோழி. செய்ய வேண்டியவற்றை அறிந்து, பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாக இருவரும் , இவ்வுலகத்தில், பிரிவினால் ஒருவராகிய.துன்பத்தினின்றும் நாம் நீங்கி தப்புதற்கு, பூவானது நம் இடையிலே பட்டாலும், அக்காலம் பல ஆண்டுகள் கடந்தாற்போன்ற துன்பத்தை உண்டாக்கும் தன்மையையுடைய, நீரினிடம் உறைகின்ற மகன்றிற்பறவைகளின் புணர்ச்சியைப் போல பிரிதல் அருமையாகிய நீங்காத காமத்தோடு ஒன்றாக எங்கள் உயிர் போகவே என் விருப்பம்.

    (கருத்து) தலைவரைப் பிரிந்திருத்தலினும் உயிர்நீத்தல் சிறப்புடையது.

மகன்றில் என்பது நீர் வாழ் பறவைகளில் ஒன்று.இப்பறவைகள் ஆணும், பெண்ணும் பிரிவின்றி இணைந்து வாழும் தன்மையுடையன.இவை மலர்களிடையே உடனுறையும் காலம், அப்பூ இடையே வரக்கூடுமாதலால் பூவின் கண் திரியும் மகன்றில் எனச் சொல்வர்

Saturday, July 26, 2014

குறுந்தொகை - 56



தலைவன் கூற்று
(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடன்படாது தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய கடினமான இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)


பாலைத்திணை - பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்.


இனி பாடல்-


வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்

குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
   
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
   
வருகதில் லம்ம தானே

அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

                          -சிறைக்குடியாந்தையார்

    உரை-

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிகைப் பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை வளையையுடைய கையாளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வந்தால், என் நெஞ்சில் அமர்ந்த என் தலைவி மிக இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.

    (கருத்து) கடினமான பாலை நிலத்தில் தலைவி வருதற்குரியவள் அல்ல,.

(பாலை நிலத்தில் நீரற்ற சுனையைத் தோண்டி வரும் சிறிதளவு தண்ணீரை மக்களும், விலங்குகளும் அருந்துவர்.காட்டுமல்லிகை அருகிலுள்ள மரங்களிலிருந்து  விழுந்து அழுகி நீரில் கொடும் தீய நாற்றத்தை உண்டாக்கும்.தலைவியை பிரிந்திருந்தாலும், அவள் உஅன் வந்திருந்தால் இந்நீரை குடிக்கும் நிலைக்கு ஆளாகி இரக்கப்பட வேண்டியவள் ஆவாள்.ஆகவே, இப்படிப்பட்ட பாலை நிலத்திற்கு வராதது அவளுக்கு நல்லதே!

Friday, July 25, 2014

குறுந்தொகை -55



தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்திலே கேட்கும் அணிமையில் நின்ற காலத்தில், அவன் விரைந்து மண்ந்து கொள்ள வேண்டுமென்பதை அறிவுறுத்துவளாய், “இவ்வூர் சிலநாளே வாழ்வதற்குரியதாகவும், இன்னாமையை யுடையதாகவும் இருக்கின்றது” என்று கூறி, மணக்காவிடின்
 தலைவி உயிர்நீப்பாளென்று தோழி புலப்படுத்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர்  நெய்தற் கார்க்கியர்

இனி பாடல்-

 
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
   
பொங்குபிதிர்த் துவலையொடு மங்கு றைஇக்
   
கையற வந்த தைவர லூதையொ
   
டின்னா வுறையுட் டாகும்

சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.

                      -நெய்தற் கார்க்கியர்


உரை-

இந்த சிறிய நல்ல ஊரானது, கரிய கழியினிடத்திலேயுள்ள நீலமணி போன்ற பூக்கள் குவியும்படி தூய அலையிடத்துப் பொங்கிய பிசிராகிய துளியோடு மேகத்தை பொருந்தி, பிரிந்தோர் செயலறும்படி தடவுதலையுடைய வாடைக்காற்றோடு துன்பத்தைத் தரும் மாலைப்பொழுதுடன், (தலைவி)தங்குமிடத்தையுடையதாகின்ற சில நாட்களையுடையது.

 (கருத்து) தலைவன் வாராவிடின் தலைவி இன்னும் சில நாட்களே உயிர் வாழ்வாளாதலின் அவன் விரைவில் மணந்து கொள்ள வேண்டும்.(அவளது உயிர் நீடிக்க)

(வி-ரை.) மணிப்பூ என்றமையால் நீலமணி போன்ற முள்ளியையும், . இவை கூம்பவென்றமையின் மாலைப் பொழுதையும் கொள்ள வேண்டும்.

குறுந்தொகை - 54


தலைவி கூற்று
(தலைவன் தலைவியை மணம் புரியாது நெடுங்காலம் வந்து பழகுங் காலத்தில் அங்ஙனம் பழகுதலால் உண்டாகும் வீண்வம்பையறிந்து வருந்திய தலைமகள் தோழியை நோக்கி, “ தலைவன் என் பெண்மை நலத்தைக் கொண்டான். இனி அவன் என்னை மணந்து கொண்டாலன்றி அதனைப் பெறேன்” என்றது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் மீனெறி தூண்டிலார்.


யானே யீண்டை யேனே யென்னலனே

 ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
   
கான யானை கைவிடு பசுங்கழை
   
மீனெறி தூண்டிலி னிவக்கும்

கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.

                            - மீனெறி தூண்டிலார்

உரை-

தோழி! நான் இங்குள்ளேன் என்னோடு முன்பு ஒன்றியிருந்த என் பெண்மை நலன், தினை புனங் காப்பார் விடும் கவண்கல்லின் ஒலிக்கு அஞ்சி காட்டுயானை கைவிட்ட பசிய மூங்கிலானது, மீனை கவர்ந்துகொண்டதூண்டிலைப் போல மேலே செல்வதற்கு இடமாகிய காட்டையுடைய தலைவனோடு நான் பழகிய அவ்விடத்தே நீங்கியது.

    .(கருத்து) தலைவன் பிரிவினால் யான் பெண்மைநலனிழந்தேன்.

கவண் கல்லின் ஒலி கேட்டு அஞ்சி, தான் உண்ணுக் கொண்டிருந்த பசுமையான மூங்கிலை யானை விட்டதும்..அது வளைந்த நிலையிலிருந்து விடுபட்டு உடன் மேலே செல்வது போல (அது எப்படி..இருக்கிறதாம் மீனைப் பிடித்த தூண்டில் மேலே செல்வது போல இருக்கிறதாம்) அன்பு செலுத்தி அன்பற்ற காலத்து பிரிந்து சென்றானாம் தலைவன்.இந்த உவமையின் சிறப்பால் இப்பாடல் ஆசிரியர் நல்லிசைச் சான்றோர் மீனெறி தூண்டிலார் எனப் பெயர் பெற்றார்.

Thursday, July 24, 2014

மூன்றாம் பிறை

                                       
                             

முந்தைய பேருந்தில்

கடைசி இருக்கைகளில்

மூன்றாம் பிறை நிலவுகள்


2)தக்காளி விலை என்ன

என்றவன்

கன்னங்கள் தக்காளியாயின


3)தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்


4)சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்

குறுந்தொகை - 53



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணப்பேன் என்ற உறுதிமொழி கூறிய பின்பும் நெடுங்காலம் கழிந்தது கண்டு தலைவி வருந்துதலை யறிந்த தோழி தலைவனை நோக்கி, “நீ கூறிய உறுதிமொழிகள் எம்மை வருத்தின; அவை பிறழாமல் நீ இனி விரைவில் மணந்துகொள்ள வேண்டும்” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்

இனி பாடல்-

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
   
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
   
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
   
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன

எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை
   
நேரிறை முன்கை பற்றிச்
   
சூரர மகளிரொ டுற்ற சூளே.

                       -கோப்பெருஞ்சோழன்.


உரை-.
தலைவனே! முன்னிடத்திலுள்ள அரும்பு முதிர்ந்த புன்னை மரத்தின் மலர்கள் , உதிர்ந்து பரந்து தங்கிய வெள்ளிய மணற்பரப்பினது வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டு எடுக்கும் இடந்தோறும் செந்நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல்மேடுகள் பொருந்திய எம்முடைய ஊரிலுள்ள அகன்ற நீர்த்துறையில் நுண்ணிய மூட்டுவாயையுடைய முன் கையைப் பிடித்து தெய்வமகளிரை சுட்ட்க் கூறிய சத்தியம் எம்மைத் துன்புறுத்தின.

(கருத்து) நீ உன் உறுதிமொழிக்கேற்ப விரைவில் மணம் செய்து கொள்ள வேண்டும்.



காதலன், காதலியை மணப்பதாக வாக்குக் கொடுத்து நீண்ட நாள் ஆகிறது.ஆகவே விரைவில் மணம் செய்துகொள்ள வேண்டும் என தோழி உரைக்கிறாள்.

புன்னைமலர்,வெள்ளிய மணற்பரப்பு..நெல்லின் வெள்ளிய பொரி சிதறினாற் போல  மணல் மேடாம்....என்ன ஒரு அற்புத கற்பனை.இப்பாடலின் சிறப்பு அதுதான்.

Wednesday, July 23, 2014

குறுந்தொகை -52



தோழி கூற்று
(தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான முயற்சிகளைச் செய்வதை அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை அறிந்த நான் உண்மையைத் தாயார்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பனம்பாரனார்

இனி பாடல்-

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
   
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
   
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
   
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை

பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.    

                                   -பனம்பாரனார்

உரை -

நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற கரிய கூந்தலையும், வரிசையான வெள்ளிப் போன்ற பல்லையுமுடைய பெண்ணே! தன்னிடமுள்ள யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர் விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நீ உன் கற்பிற்கு களங்கம் வருமோ என்று அஞ்சி நடுங்குவதை அறிந்து, உன் வருத்தத்தைப் பொறுக்கமுடியாத நான் சிறிது சிறிதாக அப்பொழுதுக்கு அப்போது உனக்காக இரங்கி வருந்தினெனல்லவா?(இப்போது தலைவன் தலைவியை மணக்க முயற்சி செய்து வருகிறேன்)

ஜாதிகள் இல்லை

                               




தனக்கும் நான்கு கால்கள்

என்பதை மறந்து

லேப்ரடாரும்

ஜெர்மன் ஷெப்பர்டும்

மோதிக் கொண்டன

ஜாதிகள் இல்லையென...

தெரு விலங்கு சிரித்தது


குறுந்தொகை-51



தோழி கூற்று
(தலைவன் தலைவையை மணந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதால், அவன் விரைந்து வந்து மணக்கவில்லையே என கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் உன்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும்  உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-
 
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
   
நூலறு முத்திற் காலொடு பாறித்
   
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
   
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்

எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
   
அம்ப லூரு மவனொடு மொழிமே.

                     _ குன்றியனார்

உரை-

வளைவாகிய முள்ளையுடைய கழிமுள்ளானது, மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றாற் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்களில் பரவுவதற்கிடமான தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை (நீ மணமுடிக்க) நானும் விரும்புகிறேன்.நம் தாயும் அவனிடம் மிக்க விருப்பமுள்ளதாய் உள்ளாள்.நம் தந்தையும் அவனுக்கு உன்னை மணமுடிக்க விரும்புவான்.(உங்களை இணைத்து)சிலரறிய பழி சொல்லும் ஊரிலுள்ளோரும் அவனுடன் உன்னைச் சேர்த்தே சொல்லுவர்.

(கருத்து - உன்னை மணமுடிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.நீ கவலைப்படாதே)

தலைவணை தலைவி மணமுடிக்க தாய் விரும்புகிறாள்.யார் விரும்பினாலும் அதற்கான உரிமை தந்தைக்கு உண்டு என்பதால் "எந்தையுங் கொடீயர் வேண்டும் என்கிறாள் தோழி

அம்பல் என்பது சிலரறிந்து கூறும் பழிமொழி

Tuesday, July 22, 2014

மின்.....சாரம்

                         


இடி..மின்னல்..

கவிதை எழுதினால்

மழை பொழிகிறது

மின்சாரம் எழுத எண்ணின்

மின்...அதற்குமேல்

சாரம் இல்லை

குறுந்தொகை - 50






தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று பிரிந்த தலைவன் தலைவிக்கு தூது அனுப்புகிறான்.அந்த தூதுவரை நோக்கி தலைவி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று கூறுகிறாள்)

மருதம் திணை - பாடலாசிரியர் குன்றியனார்

இனி பாடல்-

.  
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல்
   
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்
   
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந்
   
திலங்குவளை நெகிழச் சாஅய்ப்

புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

                       _ குன்றியனார்


உரை -

வெண்சிறு கடுகு போன்று சிறு பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து இருக்கும் தலைவனின் ஊரின் இடத்தில் நீர்த்துறையை அழகு செய்தது.(ஆனால்) அவர் முன்பு அளவளாவிய என் தோள், விளங்கும் வளையல்கள்..மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகுழும்படி மெலிந்து..தனிமையையே அழகாகப் பெற்றது.


 (கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.

 ஊரின் அழகு ஞாழல் மரப்பூவும்,மருதமரப்பூவும்..இரண்டும் இணைந்து அழகு பெற்றது.ஆனால்..தலைவன் இல்லாமால் தனித்து இருக்கும் என் தோள்களும், கை மணிக்கட்டும் ..மெலிந்து பொலிவிழந்து காணப்படுகிறது...   

Monday, July 21, 2014

குறுந்தொகை - 49


தலைவி கூற்று
(தலைமகன் விலைகளிடம் சென்று தலைவியை பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்பிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவனார்.

இனி பாடல்-


அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
   
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
   
இம்மை மாறி மறுமை யாயினும்
   
நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.

                - அம்மூவனார்

உரை-

அணிலின் பல்லைப் போன்ற தாது முதிர்ந்த கூரான முள்ளிச்செடியையும், நீலமணி போன்ற கரிய நீரையும் உடைய கடற்கரை உடைய தலைவா..இப்பிறப்பு நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என் தலைவன் இப்பொழுது என்னிடம் அன்பு செய்த்தொழுகும் நீயே ஆகுக! உன் மனதிற்கேற்ற காதலி இப்போது உன் நெஞ்சு கலந்தொழுகும் நானே ஆகுக!


(கருத்து) நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக!

(முள்ளிச்செடி வெளியில் முற்களோடு தோன்றினும் ,அச் செடியின் மணம் நிறைந்த மலர்களும், அம்மலரின் பூந்தாதும் பெற்றிருப்பதைப் போலத் தலைவன் புறத்தொழுக்கம் எப்படியாயினும், தன்னிடம் அன்பு நிறைந்தவனாகவே இருக்கிறான் என்பத் தலைவியின் கூற்று.

குறுந்தொகை -48



 
(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை மணந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் பூங்கணுத்திரையார்

இனி பாடல் -

தாதிற் செய்த தண்பனிப் பாவை
   
காலை வருந்துங் கையா றோம்பென
   
ஓரை யாயங் கூறக் கேட்டும்
   
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்

நன்னுதல் பசலை நீங்க வன்ன
   
நசையாகு பண்பி னொருசொல்
   
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

                         - பூங்கணுத்திரையார்


உரை-

பலவகைப் பொடிகளால் செய்யப்பட்ட, மிகக் குளிர்ச்சியை உடைய விளையாட்டுப் பாவையானது, காலைப் பொழுதில் வருந்துவதால் பிறந்த செயலறுதலை ஒழிப்பாயாக என்று ,விளையாட்டையுடைய மகளிர் கூட்டம் சொல்லக் கேட்ட பின்னும் இத்தகைய தன்மையுடைய வருத்தத்தை மிக அடையும் நல்ல நெற்றியினை உடைய தலைவியின் பசலை நீங்கும் படி தலைவரிடம் இவளுக்கு விருப்பமாகும் தன்மையை உடைய அத்தகைய ஒரு சொல்லானது இயலாதோ!


    (கருத்து) தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.

(மணலில் விளையாடுவது போல பாவையின் பொம்மை செய்து மகளிர் விளையாடும் விளையாட்டு பாவை.இது சங்ககால விளையாட்டுஅம்மகளிர் பலவகைப் பொடிகளால் பொம்மைப் பாவை செய்து விளையாடினர்.அப்பாவையை அப்படியே இரவு முழுதும் விட்டுச் சென்றால், காலையில் இப்பாவை வருந்தும் என தலைவியிடம் தோழிகள் கூற , தலைவி இரவு முழுதும் அதனைக் கை நழுவ விடாது காத்துக் கொண்டு வருந்தினாள்.அப்படிப்பட்ட தலைவியைக் காண நீண்ட நேரம் வராத தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்.)