தோழி கூற்று
(தலைவன் தலைவையை மணந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதால், அவன் விரைந்து வந்து மணக்கவில்லையே என கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் உன்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும் உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் குன்றியனார்
இனி பாடல்-
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரு மவனொடு மொழிமே.
_ குன்றியனார்
உரை-
வளைவாகிய முள்ளையுடைய கழிமுள்ளானது, மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றாற் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்களில் பரவுவதற்கிடமான தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை (நீ மணமுடிக்க) நானும் விரும்புகிறேன்.நம் தாயும் அவனிடம் மிக்க விருப்பமுள்ளதாய் உள்ளாள்.நம் தந்தையும் அவனுக்கு உன்னை மணமுடிக்க விரும்புவான்.(உங்களை இணைத்து)சிலரறிய பழி சொல்லும் ஊரிலுள்ளோரும் அவனுடன் உன்னைச் சேர்த்தே சொல்லுவர்.
(கருத்து - உன்னை மணமுடிக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.நீ கவலைப்படாதே)
தலைவணை தலைவி மணமுடிக்க தாய் விரும்புகிறாள்.யார் விரும்பினாலும் அதற்கான உரிமை தந்தைக்கு உண்டு என்பதால் "எந்தையுங் கொடீயர் வேண்டும் என்கிறாள் தோழி
அம்பல் என்பது சிலரறிந்து கூறும் பழிமொழி
No comments:
Post a Comment