Thursday, July 31, 2014

குறுந்தொகை - 61



தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறவில்லையாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலால் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்ரும் இல்லை" என்று கூறித் தோழி அனுமதி மறுத்தது.)


மருதம் திணை - பாடலாசிரியர் தும்பிசேர்கீரன்

இனி பாடல்-

தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்துஇன் புறாஅ ராயினும் கையின்

ஈர்ந்துஇன் புறூஉம் இளையோர் போல

உற்றுஇன் புறேஎ மாயினும் நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்துஇன் புற்றனெம் செறிந்தன வளையே

                                   -தும்பிசேர்கீரன்

உரை-

தச்சனால் செய்யப்பட்ட சிறு குதிரை பூட்டப்பெற்ற சிறுவண்டியை ஏறிச் செலுத்து இன்பமடையாராயினும், கையால் இழுத்து இன்பமடையும் சிறுவரைப் போல மெய்யுற்று இன்பமடையேமாயினும் நல்ல தேர்களையும், பொய்கையையும் உடைய ஊர்க்குத் தலைவனது நட்பை மேன்மேலும் பெருகச்செய்து இன்பம் அடைந்தோம்.அதனால் வளைகள் கழலாமல் இறுகியமைந்தன.

(கருத்து) தலைவர் எம்மை மறந்தாலும் யாம் அவரை மறக்கவில்லை


(மரத்தச்சன் செய்த குதிரை, மரக்குதிரையே ஆனாலும், அதனை ஓட்டும் சிறுவர்கள் அதனை உண்மையானக் குதிரை என்றே எண்ணியே ஓட்டி மகிழ்வர். நல்ல பல தேர்களையும் பல பொய்கைகளையும் கொண்ட ஊரை உடையத் தலைவனது மெய்யோடு மெய்சேர்ந்து இன்பம் பெறாவிட்டாலும், அவனுடன் மனதளவில் நான் கொண்ட காதலால் இன்பமடைந்திருக்கிறேன்.. அதனால் என்னுடைய கை வளையல்கள் நெகிழ்ந்து வீழ்ந்துவிடவில்லை..!! (தலைவனது பிரிவால் கை வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு உடல் மெலியும்... ஆனால் அது இப்போது இல்லாமல் போய்விட்டது).








No comments: