Monday, July 21, 2014

குறுந்தொகை - 49


தலைவி கூற்று
(தலைமகன் விலைகளிடம் சென்று தலைவியை பிரிந்து மீண்டு வந்த காலத்து முன்பிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவனார்.

இனி பாடல்-


அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
   
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
   
இம்மை மாறி மறுமை யாயினும்
   
நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே.

                - அம்மூவனார்

உரை-

அணிலின் பல்லைப் போன்ற தாது முதிர்ந்த கூரான முள்ளிச்செடியையும், நீலமணி போன்ற கரிய நீரையும் உடைய கடற்கரை உடைய தலைவா..இப்பிறப்பு நீங்கி, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என் தலைவன் இப்பொழுது என்னிடம் அன்பு செய்த்தொழுகும் நீயே ஆகுக! உன் மனதிற்கேற்ற காதலி இப்போது உன் நெஞ்சு கலந்தொழுகும் நானே ஆகுக!


(கருத்து) நம்முடைய அன்பு பிறவிதோறும் தொடரும் இயல்பின தாகுக!

(முள்ளிச்செடி வெளியில் முற்களோடு தோன்றினும் ,அச் செடியின் மணம் நிறைந்த மலர்களும், அம்மலரின் பூந்தாதும் பெற்றிருப்பதைப் போலத் தலைவன் புறத்தொழுக்கம் எப்படியாயினும், தன்னிடம் அன்பு நிறைந்தவனாகவே இருக்கிறான் என்பத் தலைவியின் கூற்று.

No comments: