Monday, July 21, 2014

குறுந்தொகை -48



 
(தலைவன் பகல் பொழுதில் வந்து தலைவியுடன் பழகும் காலத்தில் அவனைக் காணாது நெடுநேரம் கழிவதனால் துயருற்ற தலைவியினது மேனியிற் பசலை முதலிய வேறுபாடுகள் உண்டானமை கண்டு வருந்தி, “தலைவர் இவளை மணந்து கொள்வோம் என்று சொல்லாரோ!” என்று தோழி கூறியது.)

பாலை திணை - பாடலாசிரியர் பூங்கணுத்திரையார்

இனி பாடல் -

தாதிற் செய்த தண்பனிப் பாவை
   
காலை வருந்துங் கையா றோம்பென
   
ஓரை யாயங் கூறக் கேட்டும்
   
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்

நன்னுதல் பசலை நீங்க வன்ன
   
நசையாகு பண்பி னொருசொல்
   
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.

                         - பூங்கணுத்திரையார்


உரை-

பலவகைப் பொடிகளால் செய்யப்பட்ட, மிகக் குளிர்ச்சியை உடைய விளையாட்டுப் பாவையானது, காலைப் பொழுதில் வருந்துவதால் பிறந்த செயலறுதலை ஒழிப்பாயாக என்று ,விளையாட்டையுடைய மகளிர் கூட்டம் சொல்லக் கேட்ட பின்னும் இத்தகைய தன்மையுடைய வருத்தத்தை மிக அடையும் நல்ல நெற்றியினை உடைய தலைவியின் பசலை நீங்கும் படி தலைவரிடம் இவளுக்கு விருப்பமாகும் தன்மையை உடைய அத்தகைய ஒரு சொல்லானது இயலாதோ!


    (கருத்து) தலைவன் இத்தலைவியை வரைந்து கொண்டால் இவள் தன் துன்பத்தினின்றும் நீங்குவாள்.

(மணலில் விளையாடுவது போல பாவையின் பொம்மை செய்து மகளிர் விளையாடும் விளையாட்டு பாவை.இது சங்ககால விளையாட்டுஅம்மகளிர் பலவகைப் பொடிகளால் பொம்மைப் பாவை செய்து விளையாடினர்.அப்பாவையை அப்படியே இரவு முழுதும் விட்டுச் சென்றால், காலையில் இப்பாவை வருந்தும் என தலைவியிடம் தோழிகள் கூற , தலைவி இரவு முழுதும் அதனைக் கை நழுவ விடாது காத்துக் கொண்டு வருந்தினாள்.அப்படிப்பட்ட தலைவியைக் காண நீண்ட நேரம் வராத தலைவனுக்குக் கேட்குமாறு தோழி தலைவியிடம் கூறுகிறாள்.)




No comments: