Monday, July 28, 2014

குறுந்தொகை -58




தலைவன் கூற்று
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்.

இனி பாடல்-
 
இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
 
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
 
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
 
கையி லூமன் கண்ணிற் காக்கும்

வெண்ணெ யுணங்கல் போலப்
 
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.

.                        -வெள்ளிவீதியார்

உரை-

இடித்துரைக்கும் நண்பரே! நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நல்லது.என் விருப்பமும் அதுவே! சூரிய வெயில் எறிக்கும் வெம்மையுடைய பாறையினிடத்தே , கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணையைப் போல என்னிடத்தில் உண்டான இக்காமநோய் பரவியது.பொறுத்துக் கொண்டு நீக்குதற்கு அரியதாக உள்ளது.

 (கருத்து) காமநோய் பொறுத்தற்கரியது..

வெண்ணெய் சூரிய வெப்பத்தால் உருகி பரந்ததுபோலக் காமநோய் பரந்தது,அவ்வெண்ணெய் உருகாமல் காக்கும் பொருட்டு கையில்லாத, வாய் பேசமுடியா ஊமை பிறரைக் கூவி அழைத்து பாதுகாக்க செய்யவும் இயலாது போல, காமநோயை அடக்கி பாதுகாக்கும் ஆற்றலை நான் பெறவில்லை.இதனைக் காக்க இயலவில்லை.
 எப்படி ஒரு உவமை சொல்லப்படுகிறது பாருங்கள்.இதுவே இப்பாடலின் சிறப்பு.

No comments: