Wednesday, July 30, 2014

குறுந்தொகை - 60

தலைவி கூற்று

(தலைவனது பிரிவை தாங்க முடியாத  தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாமல் இருப்பினும் அவரைக் கண்டதுமே எனக்கு இன்பம் பிறக்கும்; அஃது இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் பரணர்

இனி பாடல் -
 
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
   
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன்
   
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து
   
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
5
நல்கார் நயவா ராயினும்
   
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே.

                  - பரணர்

உரை -
உயர்ந்த மலையில் உள்ள குறிய அடியையுடைய கூதளஞ்செடி அசைய (அதில்) பெரிய தேனடையைக் கண்ட , காலில்லா எழுந்தும் நிற்க முடியாத முடவன், உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை குழித்து அம்மலையின் கீழே இருந்தபடியே அத்தேனடையை பலமுறை சுட்டி உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப்போல தலைவர் என்னிடம் பேசவிரும்பாராயினும், அவரைப் பலமுறைப் பார்த்தல் என் நெஞ்சிற்கு இனிமை தரும்.

(கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.


முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாலும், அது கிடைக்காது எனினும், அதைக்கண்டளவிலே இன்பம் அடைவது போல தலைவரிம்ன் தண்ணளியையும், நயப்பையும் பெறாவிடினும் அவரைக் காண்பதே இன்பம் (என்கிறாள் தலைவி)

   

No comments: