தலைவி கூற்று
(விலைமகளிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)
மருதம் திணை - பாடலாசிரியர் ஔவையார்
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் னெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை யிரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே.
-ஔவையார்
உரை-
ஒன்றோடொன்று பிணங்கு தலையுடைய பிரப்பங்கொடியின் புறத்தே வரிகளையுடைய விளைந்த பழத்தை, ஆழமாக நீரையுடைய குளத்திலுள்ள கெண்டை மீன் கவ்வுதற்கிடமாகிய தண்ணிய நீர்த் துறைகளையுடைய ஊர்த்தலைவனுக்குரிய மனைவியாக நீ இருப்பின் நின் உள்ளத்தில் துன்பம் பலவாக ஆகுக.காலமும். இடமும் பெறுவார் தகுதியும் நோக்கி யொழியாமல் எப்பொழுதும் கொடுக்கும், மேகம் போன்று கைமாறு கருதாத வண்மையையுடைய கையினையும், விரைந்த செலவையுடைய ஆண்யானைகளையும் ,உயர்ந்த தேர்களையும் உடைய அதியமான் அஞ்சியெனும் உபகாரியினது அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் உள்ள இரவையுடைய ஊரிலுள்ளோர் போல நீ துயிலும் நாட்கள் சிலாஆகுக!
(கருத்து) தலைவன்பால் இரங்கி இப்பொழுது உடம்பட்டாலும் பின்னும் தன் ஒழுக்கத்தினின்றும் அவன் மாறுபடான்.
.(கெண்டைமீன் பிரப்பம் பழத்தைக் கவர்ந்து உண்ணும் குளங்கள் சூழ்ந்த நாட்டை உடையவன் தலைவன். அவனது மனைவி நீ ஆயின் இரவூர் போல நீ துஞ்சும் நாள் சிலவாகுக. உன் நெஞ்சம் அவன் என்னைக் கவர்ந்து உண்டதை நினைந்து நினைந்து வருந்தும் நாள் பலவாகுக - இவ்வாறு பரத்தை தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.
கெண்டைமீன் பிரம்புப் பழத்தைக் கௌவும் என்றது தலைவன் பரத்தையைக் கௌவிக்கொண்டதை உணர்த்தும் உள்ளுறை.)
இரவூர் என்னும் ஊரை அதியமான் நெடுமான் அஞ்சி தன் யானைப்படையுடன் சென்று தாக்கினான். அதுமுதல் இரவூர் மக்கள் சில நாட்களே உறங்கினர். பலநாள் அவன் தாக்கியதை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகி வருந்தினர்.