Thursday, August 7, 2014

குறுந்தொகை - 70



தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்

இனி பாடல்-

ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்
   
நறுந்தண் ணீர ளாரறணங் கினளே
   
இனைய ளென்றவட் புனையள வறியேன்
   
சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.

                       -ஓரம்போகியார்

உரை-

(நெஞ்சே) ஒடுங்கிய நெய்ப்புடைய கூந்தலையும், ஒள்ளீய நுதலையும் உடைய தலைவி மணத்தையும், தண்மையையும் உடைய தன்மையினள்.ஆனாலும், பிரிந்த காலத்துப் பொறுத்ததற்கரிய வருத்தத்தையும் தருபவள்.அவளை, இத்தகையவள் என்று(சொல்லமுடியவில்லை), அவள் சொற்கள் சின்மையையுடையன,மென்மையுடையன.. நான் அவளை அணைக்கும் போது பஞ்சணை போன்ற மென்மையை உடையவள்.

   (கருத்து) இவள் ஐம்புலனுக்கும் இன்பந்தருபவள்.

    (வி-ரை.) ஒடுங்கீரோதி யென்றது, ஐவகைக் கூந்தற் பகுப்பில் ஒன்றாகிய சுருளை.புனையப் புனைய மேலும் புனையத் தோன்றுவதன்றி இவ்வளவே என வரையறுத்து நிறுத்தலாகாமையின், புனையள வறியேனென்றான்.

காட்சி இன்பமும்,கேள்வி இன்பமும்,ஊற்றின்பமும், உயிர்ப்பின்பமும்,சுவை இன்பமும் ஒருங்கே பெற்றவள்

No comments: