Sunday, August 3, 2014

குறுந்தொகை - 65



தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ? என்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கோவூர் கிழார்.

இனி பாடல்-


வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்
   
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
   
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
   
வாரா துறையுநர் வரனசைஇ

வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே.


                          - கோவூர் கிழார்.

உரை-(தலைவி உரைத்தது)

வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த ஆண்மான், இன்பத்தை நுகர்தற்குரிய தனது பெண்மானோடு களிப்பினாள் துள்ளி விளையாடாமல் நிற்கவும், இங்கு வராமல் சென்ற இடத்திலேயே தங்கிய தலைவர், மீண்டும் வரவேண்டும் என விரும்பி மிக வருந்தித் தங்கும் பொருட்டு உயிரை வைத்துக் கொண்டிருந்தீரோ என்று கேட்டதற்கு மழைத்துளியைத் தரும் குளிர்ந்த கார் பருவம் வந்தது.

(கருத்து) கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வரவில்லை

    (வி-ரை.) மான் தன் துணையோடு விளையாடும்படி கார்ப் பருவம் வரவும், தலைவர் தம் துணையோடு மகிழும்படி வந்து சேர்ந்திலர் என்னும் குறிப்புத் தோன்றுகின்றது. 'கார்ப்பருவம் வந்த பின்பும் ,அவர் வராமல் நாம் உயிரோடு இருத்தல் தவறு' என்னும் நினைவினளாதலின் அக்கருத்தை அப்பருவம் கேட்பதாக அமைத்தாள். இனி அவர் விரைவில் வாராவிடின் உயிர் வாழ்தல் அருமை என்பதும் புலப்பட்டது.

No comments: