தலைவன் கூற்று
(பொருளை ஈட்டுதற்பொருட்டுத் தலைவியைப் பிரிய எண்ணிய நெஞ்சை நோக்கி, "இத்தலைவி நம் காமநோய்க்கு மருந்தும், இன்பம் பெறுதற்குச் செல்வமும் ஆதலின் இவளைப் பிரிதல் இயலாது" என்று தலைவன் கூறியது.)
பாலைத் திணை - பாடலாசிரியர் கருவூர் ஓதஞானி.
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.
-கருவூர் ஓதஞானி.
உரை-
(நெஞ்சே) தோற்றிய தேமலையுடைய, அழகிய பெருமையையுடைய இளைய மார்பகங்களையும், பெரிய தோளையும், சிறுத்த இடையையும் உடைய கற்கள் பொருந்திய காட்டையுடையவர் பெற்ற மகள், என் காம நோய்க்கு பரிகாரம் வேண்டுமென்று கருதும் போது எனக்கு பரிகாரம் ஆவாள்.போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமும் ஆவாள்.
(கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.
(இவளைப் பிரிந்தால் தன் காம நோய்க்கு மருந்தில்லை,அம்மருந்தும்.. வாழ்வில் இன்புற்றிருக்க தேடிச் செல்லும் செல்வமும் இவளே ஆவாள்)
No comments:
Post a Comment