Monday, August 18, 2014

குறுந்தொகை -81


தோழி கூற்று
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி - பாடலாசிரியர் வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

இனி பாடல்-
 
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்
   
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப்
   
புதுநல னிழந்த புலம்புமா ருடையள்
   
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும்

நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக்
   
கடலுங் கானலுந் தோன்றும்
   
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.

                      -வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

உரை -
தலைவியானவள் குறையுறும் நின் சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை தெளிந்து , பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, இதுவரை புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான தனிமையையுடையவள். நிலவையும் அதனோடு நின்ற இருளையும் போல, புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய கடலும் அதன் கரையிலுள்ள சோலையும் கண்ணுக்குத் தோன்றுகின்ற மடல்கள் தாழ்ந்த பனைமரங்களையுடைய எமது சிறிய நல்ல ஊர் அதோ பார்.இனி எம்மைமறவாது நினைக்க வேண்டும்.


     (கருத்து) இனி எம்மை மறவாது எம்மூருக்கு வந்து பழக வேண்டும்.

 ஞாழல் - நெய்தற் குரியதொரு மரம். தோழியிற் கூட்டம் கூடிய தலைவன் தலைவியோடு கடற்கரையிலுள்ள ஞாழன்மரத்தின் நிழலில் அளவளாவினான் ஆதலால், ‘ஞாழற் பல்சினை யொருசிறைப், புதுநலனிழந்த புலம்புடையள்’ என்றாள்.
 
     அலையின் பிறழ்ச்சியால் வெண்மையாகத் தோற்றும் கடலுக்கு நிலவும், அடர்த்தியால் இருண்டு தோன்றும் கானலுக்கு இருளும் உவமை;
    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

No comments: