Saturday, August 30, 2014

குறுந்தொகை - 92



தலைவி கூற்று
(மாலைப்பொழுது வந்ததுகண்டு தலைவி, “பறவைகள் தம் குஞ்ச்கலுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி, “இனிஆற்றேன்” என்பதுணர்த்தியது.)

நெய்தல் திணை= பாடலாசிரியர் தாமோதரன்

இனி பாடல்-
   
ஞாயிறு பட்ட வகல்வாய் வானத்
   
தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
   
இறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
   
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய

இரைகொண் டமையின் விரையுமாற் செலவே

                      _ தாமோதரன்

உரை-

கதிரவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், தாம் தங்கும்படி உயர்ந்த
வளர்ந்த கடம்ப மரத்தில் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் உள் வாயினுள்ளே செருகும் பொருட்டு இரையை தன் அலகில் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லும்.அவை இரங்கத்தக்கன.


 (கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.

   
(இதனால் தலைவி மாலைப்பொழுது வந்ததையறிந்து காமநோய் மிகப்பெற்று ஆற்றாளாயினளென்பது மறைபொருள்)

No comments: