Wednesday, August 27, 2014

குறுந்தொகை - 90



தோழி கூற்று
(தலைவன் திருமணம் செய்யாது நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் சேந்தன் பூதன்.

இனி பாடல்-


எற்றோ வாழி தோழி முற்றுபு
   
கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய
   
மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
   
கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி

வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம்
   
குன்ற நாடன் கேண்மை
   
மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.

                         - சேந்தன் பூதன்.

    உரை-

சூல் முற்றி மிளகுக்கொடி வளர்ந்திருக்கும் மலையடுக்கத்தில் இரவெல்லாம் முழங்கிக்கொண்டு மழை பொழிய, கலைமான் சுளையைத் தின்றபின் கோதுமயிரினை உடைய பலாப்பழம் வரைப்பாறையிலிருந்து விழும் அருவியில் மிதந்து வரும் நாட்டை உடையவன் தலைவனது நட்பு உனது மெல்லிய தோள்களை மெலியச் செய்தும் அமைதியைத் தந்தது


 (கருத்து) நீ மெலிந்தாயாயினும் இயல்பு வேறுபட்டாயல்லை.


தலைவன் தலைவியை அடைய வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். திருமணம் செய்துகொள்வதில் காலம் கடத்துகிறான். தலைவனுக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள். (தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொண்டு அடையலாம். (இப்போது அடைய முடியாது என்பது கருத்து.)


   

No comments: