Friday, August 1, 2014

குறுந்தொகை -63



தலைவன் கூற்று
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)

பாலைத் திணை - பாடலாசிரியர் உகாய்க்குடிகிழார்

இனி பாடல்-


ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
 
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
 
கம்மா வரிவையும் வருமோ
 
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே

                       - உகாய்க்குடிகிழார்

               
உரை

தலைவன் கூற்று

இரவலர்க்குக் கொடுத்தலும், இன்பங்களை அனுபவித்தலும், பொருளில்லா வறியவர்க்கு இல்லையென கருதி, பொருள் செய்தற்குரிய செயல்களை மிக எண்ணாமல் நின்றாய்.அச்செயல் செய்வதற்குத் துணையாக, அழகிய மாந்தளிர் நிறத்தையுடைய தலைவியும் வருவாளோ?எம்மை மட்டும் செலுத்துகின்றாயோ? சொல்லிடு என் நெஞ்சே!


(கருத்து) இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாதது.

பொருள் ஈட்ட முயற்சி செய்யாது இல்லத்திலேயே தங்கியிருப்பது யாருக்காக.நீ பொருள் ஈட்ட வேற்று நாட்டுக்குச் சென்றால், உடன் அங்கு தலைவியும் வருவாளோ?வாராவிடின் நான் மட்டும் போக வேண்டும்? இவளைப் பிரிந்து நான் எப்படி செல்வேன்? என அவள் மீது தனக்கு இருக்கும் அன்பை சொல்கிறான் தன் நெஞ்சிற்கு! ( அதனால் பொருள் ஈட்ட செல்ல மாட்டான் என்று பொருள் கொள்ளக்கூடாது)

 

 

No comments: