தோழி கூற்று
(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
குறிஞ்சி திணை - பாடியவர் மதுரைக் கதக்கண்ணன்
ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே.
- மதுரைக் கதக்கண்ணன்
உரை-
ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன் சிறிய கண்ணையுடைய பெரிய களிறு வலிமையான புலியைத் தாக்கி ,தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே இடையிரவில் வருதலையும் செய்வான்.அங்ஙனம் அவன் வருதலினால் நமக்கு உண்டாகும் ப்ழிக்கு நாம் வெட்கப்பட மாட்டோம்.
(அருவியானது ஓங்கிய மலையிலிருந்து கீழிழிந்து நிலப்பரப்பி லுள்ளாருக்குப் பயன்படுவது போலத் தலைவன் நெடுந்தூரம் கடந்து வந்து பார்ப்பான்)
(கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.
(வழியின் ஏதத்துக்கு அஞ்சாமல் அவனே வரும்பொழுது அவனை ஏற்றுக்கொள்ளாமல் நாணி மறுத்தல் அழகன்றென்பது தோழியின் நினைவு.)
இரவுக்குறி _ தலைவன் இரவில் வந்து தலைவியை சந்திக்கும் இடம்
.
No comments:
Post a Comment