தோழி கூற்று
(தலைவன் தெய்வம் உன் உறுதிமொழி அளித்துப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அதனால் அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)
குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்
இனி பாடல்-
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும்
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.
என்பது தலைமகள் தெய்வத்திற்குப் பராயது.
-கபிலர்.
உரை-
பொதுவிடத்திலுள்ள மராத்தின் கண் தங்கும், பிறருக்கு அச்சம் தரும் முதிர்ந்த தெய்வம் கொடுமையுடையாரை வருத்தம் என்று அறிந்தோர் கூறுவர்.குன்றுகள் பொருந்திய நாட்டுடைய என் தலைவர் சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை உடையவர் அல்லர்.என் நெற்றி நான் அவரை விரும்பியதால் பசலை பெற்றது.என் மனம் அவர் திறத்து நெகிழ்ந்ததால் பரந்த மெல்லிய என் தோள் மெலிவுற்றது.
(கருத்து) என்பால் உண்டான வேறுபாடுகளுக்குத் தலைவர் காரணரல்லர்.
தலைவன் தலைவியோடு அளவளாவிய பொழுது கடம்ப மரத்திலுறையும் கடவுள்மேல் ஆணையிட்டு, “நின்னைப் பிரியேன்: பிரியின் ஆற்றேன்” என்று உறுதி அளித்தான்.தெளித்தான்; பின்னர் அவன் பிரிந்து நீட்டித்தானாக அப்பிரிவினால் தலைவி வேறுபாடு உற்றாள். தன்னுடைய வேறுபாடு களுக்குக் காரணம் தலைவன் பிரிந்துறையும் கொடுமையே ஆதலின், அக் கொடுமை கருதி அவனாற் சூளுறப்பட்ட கடவுள் அவனை ஒறுக்கு மென்று அவள் கவன்றனள். ஆதலின் தலைவன் கொடுமையுடையன் அல்லன் எனக் கூறி அவன் துன்புறாமற் செய்ய வேண்டுமென்று தெய்வத்தை வேண்டினாள்.
No comments:
Post a Comment