Friday, August 22, 2014

குறுந்தொகை - 85



தோழி கூற்று
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவர் அன்பு புலப்படுகின்றது.  ஆனால் அவர் செயலால் தெரியவில்லை” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் வடமவண்ணக்கன்

இனி பாடல்-

யாரினு மினியன் பேரன் பினனே
   
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
   
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
   
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்

நாறா வெண்பூக் கொழுதும்
   
யாண ரூரன் பாணன் வாயே.

                 -வடமவண்ணக்கன்

உரை-
  உரினுள் இருக்கும் குருவியின் துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை அமைக்கும் பொருட்டு தேன் பொதிதலைக் கொண்ட இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசா வெள்ளிய பூவை கோதியெடுக்கும்.புதிய வருவாயை உடைய ஊருக்குத் தலைவன் பாணனது சொல்லின் அளவில் எல்லாரினும் இனிமை உடையான்/தலைவியினிடம் பெரிய அன்பினை உடையான்.(உண்மையில் அங்ஙனம் இல்லை)

   

(கருத்து) பாணன் தலைவனைப் புகழினும் தலைவன் அன்பிலன்.

No comments: