தலைவி கூற்று
(தலைவன் பிரிவினால் வருந்திய தலைவி முன்பனிப்பருவத்தும் அவன் வாராமையால் துன்புற்று, "இப்பனியின் துன்பத்தைத் தீர்ப்பது தலைவருடைய மார்பேயாகும்; ஆதலின் அவர் வாராவிடின் இதனை ஆற்றுதல் அரிது" என்கிறாள்.)
குறிஞ்சி திணை -பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை
இனி பாடல்-
பூழ்க்கா லன்ன செங்கா லுழுந்தின்
ஊழ்ப்படு முதுகா யுழையினங் கவரும்
அரும்பனி யச்சிரந் தீர்க்கும்
மருந்பிறி தில்லையவர் மணந்த மார்பே.
-அள்ளூர் நன்முல்லை..
உரை-
குறும்பூழ்ப் பறவையின் காலைப் போன்ற செவ்விய காலையுடைய உழுந்தினது மிக முதிர்ந்த காய்களை மான்கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கூடும் பொறுத்தற்கரிய பனியையுடைய முன்பனிக்காலத்தில் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் மருந்து ,என்னை மணந்த அவரது மார்பைத் தவிர வேறு ஏதும் இல்லை.
(கருத்து) அவர் உடன் இல்லாததால் முன்பனிப் பருவம் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.(என்கிறாள் தலைவி)
(உளுந்தின் வேர் சிறிது மேலே தெரிந்தவண்ணம் முன்பனிப் பருவத்தில் முதிரும்.அதைத் தின்ன முன்பனிக்கால, பொறுக்கமுடியா பனியை பொறுத்து மான் கூட்டங்கள் கூடும்.ஆனால்..எனக்கு அப்பனிக்கொடுமையைப் போக்கும் மருந்து என் தலைவன் மார்புதான் (என்கிறாள் தலைவி)
No comments:
Post a Comment