Thursday, August 7, 2014

குறுந்தொகை - 69



தோழி கூற்று
(இரவில் தலைவியைக் காண விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வராதே!" என்று தோழி மறுத்துக் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கடுந்தோட் கரவீரன்.

இனி பாடல்-

கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
   
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
   
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
   
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சார னாட நடுநாள்
   
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.
                       
                           -கடுந்தோட் கரவீரன்.

   உரை-

கரிய கண்ணையும், தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்துவிட்டால், கைம்மைத் துன்பத்தைப் போக்கமுடியாத பெண்குரங்கானது, மரமேறுதல் போன்ற வற்றை அறியாத தனது வலிய குட்டியை, சுற்றத்தினிடம் ஒப்படைத்து, ஓங்கிய மலைப்பக்கத்தில் தாவி உயிரைப் போக்கிக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில் வராதே! நீ வந்தால் தீங்கு உண்டாகும் என எண்ணி நாங்கள் வருந்துவோம்.நீ தீங்கின்றி வாழ்வாயாக!


        (கருத்து) நீ இரவில் வருதலைத் தவிர்.
;
 


No comments: