Thursday, August 21, 2008

இளைஞர்களுக்கு வழிவிடப்படுமா?

தி.மு.க.வைத் தொடங்கும்போது அண்ணாவுக்கு நாற்பது வயது, நாவலருக்கு 29 வயது, பேராசிரியருக்கு 27 வயது, கலைஞருக்கு 25 வயது, மதியழகனுக்கு 25 வயது... எனவே, வயது எதற்கும் தடையில்லை... - இப்படித்தான் தி.மு.க.வின் தலைவர்கள் எல்லாரும் பேசினார்கள், 1980-ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது!

ஆனால், தி.மு.க.வில் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தாலும்கூட கேள்விக்குறியாகவே தொடருகிறது இது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முதல்வர் கலைஞரின் உடல்நலம் பற்றிய சங்கடங்கள் வெளியே தெரியத் தொடங்கியபோது, ஸ்டாலின் முதல்வராவாரா? என்ற கேள்வி விவாதமானது. ஸ்டாலின் முதல்வராவதை ஆதரிப்பதாக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தபோதிலும்கூட, பதில்கள் மட்டும் பூடகமாகவே வெளியிடப்பட்டு வந்தன.

இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கொதிநிலையை எட்ட, நெல்லையில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது ஸ்டாலின் முதல்வராக அறிவிக் கப்படுவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான பதிலுடன் அறிவிப்பு தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்துதான், இந்த யோசனையை யார் எதிர்ப்பது, ஏன் தள்ளிப் போகிறது, அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.

தொடர்ந்து, அடுத்த வாரிசுகளான அழகிரி, கனிமொழி போன்றோர் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ஒரு சர்வேயின் பலனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட தயாநிதி மாறனுடைய அரசியலும் இந்த சர்ச்சைகளுக்குள்ளே புகுந்து விளையாடத் தொடங்கியது.

அதிகாரத்தைக் குறிவைக்கும் குடும்ப அரசியலில் ஸ்டாலினும் ஒரு காயாகி, அங்கே இங்கே என்று நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அண்மையில் ஸ்டாலின் மேற்கொண்ட லண்டன் பயணமும், அது தொடர்பான செய்திகளும் சர்ச்சைகளை மேலும் மேலும் வளப்படுத்தின. ஒருகட்டத்தில் ஸ்டாலின் ஓரங்கட்டப்படுகிறார் என்றேகூட கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த பலரால் கருதப்பட்டது.

வேலூர் மாநகராட்சித் தொடக்க விழாவில் பேசிய கலைஞரோ, `அடுத்த முறை முதல்வராக நான் விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என்றார். இத்தனைக்கும் மேடையில் உடனிருந்த ஸ்டாலின் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மதுரையில் டி.எம். சௌந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அழகிரியைப் பாராட்டி அவர் பேசிய பேச்சும், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சிலை திறப்புக்கேகூட ஸ்டாலின் வராததும் சேர, அவருடைய ஆதரவாளர்களிடையே தர்மசங்கட அலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னையில் அண்மையில் ஒரு மேம்பாலத் திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலினையும் வைத்துக்கொண்டு பேசியபோதுதான், ஸ்டாலின் ஊக்கை விழுங்கிய கதையைக் கூறி, `அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி, அமைச்சராகி, இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்' என்று குறிப்பிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் முதல்வராவாரா?

இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டதாகவே நம்பத் தகுந்த வட்டாரங்களின் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பதுடன், காங்கிரஸின் கோரிக்கைக்கு செவிமடுத்து அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது பற்றிய அறிவிப்பையும் ஒருசேர செப்டம்பரில் கலைஞர் வெளியிடுவார் என இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அனேகமாக, செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி, உள்கட்சித் தேர்தல் முடிந்து நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு `காம்ப்ரமைஸ் ஃபார்முலா' உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஸ்டாலின் மீண்டும் உற்சாகமாகக் காணப்படுவதற்கு இந்தப் புதிய முடிவுதான் காரணம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த முடிவை நோக்கி கலைஞர் சென்றடையப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, உள்கட்சி தாண்டி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சாதாரண மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படும் `யார் அடுத்த வாரிசு?' என்பது பற்றிய அநாவசியமான சர்ச்சை. இதையொட்டியே பேசப்படும் அவருடைய உடல்நிலை தொடர்பான சங்கடங்கள்.

இவையெல்லாம் இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடக் கூடும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.

``கலைஞர் கண் முன்னாலேயே ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்காது. தென் மாவட்டங்களையும் சேர்த்தால்கூட பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின் வருவதை எவ்வித முணுமுணுப்புமின்றி எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் செய்த சுற்றுப்பயணம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.

``வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சிலரும்கூட பல்வேறு காரணங்களால் இப்போது ஸ்டாலினை ஏற்றுச்செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஒருவேளை எதிர்ப்பு இருந்தாலும் ஒரு சொல்லில் கலைஞரால் அடக்கிவிடவும் முடியும். தக்க விதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வாரிசுகள் இணக்கமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கலைஞருடைய கண்காணிப்பு இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காமராஜருக்குப் பிறகும், எம்.ஜி.ஆருக்குப் பிறகும் தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேர்ந்ததை வரலாறு திருப்பிச் சொன்னாலும் வியப்பதற்கில்லை'' என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

``ஆட்சியிலும் தேர்தலிலும் ஸ்டாலின் முன்னிறுத்தப்படும்பட்சத்தில் மாறன் சகோதரர்களின் எதிர்ப்புகூட மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஏனெனில், அழகிரியிடம் காட்டும் வன்மத்தை இவர்கள் ஸ்டாலினிடம் காட்டுவதில்லை. தேர்தல் என்று வரும்போது தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க இவர்கள் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் எல்லாமும்கூட மட்டுப்படலாம்.

``பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இடதுசாரிகளும் வெளியேறினால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அ.தி.மு.க. அணி மேலும் வலுப்படும்பட்சத்தில், கட்சிக்குள் நடைபெறும் உள்குத்து அரசியல், தி.மு.க.வுக்குப் பெரும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்'' என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வெற்றியோ, தோல்வியோ மக்களவைத் தேர்தலை ஒருவழியாகச் சமாளித்துவிட்டாலும் மாநிலத்தில் மீதியுள்ள ஆட்சிக்காலம்? இந்த இடத்தில்தான் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தரும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸை மட்டுமே நம்பி ஆட்சியைத் தொடர வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்வது மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும். இல்லாவிட்டால், கோஷ்டிகளுக்குப் புகழ்பெற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்) தி.மு.க. அரசை மிக எளிதாக, மிக விரைவாக ஜெயலலிதா கவிழ்த்துவிடும் வேலைகளில் இறங்குவார். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

காங்கிரஸ் பங்கேற்புடனான தி.மு.க. ஆட்சி என்றால் தற்போதைய சூழலில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்டாலின் தலைமையில் மீதியுள்ள ஆண்டுகளை உறுதிப்பட நகர்த்திவிடவும் முடியும். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வலுப்பட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது வெற்றிக்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் கலைஞரும் தி.மு.க. வட்டாரங்களும் கருதுவதாகக் கூறப்படுகிறது.

`நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரராக அரசியலில் தொடர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். சிறுவயதிலேயே கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அவர் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புவார். இளைஞர் தி.மு.க. என்று தொடங்கிப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி போல திடீரென வந்தவரல்லர் அவர்' என்றே தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

`தலைவர் மகன் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே கட்சி தொடர்பான சிந்தனையுடன்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க.வின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் அவருக்கும் இடமிருக்கிறது. போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று வந்திருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார்' என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தந்தைக்கு இணையாக முடியாது என்றாலும் பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்கு அவர் சிறந்த நிர்வாகி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. சென்னை மாநகரின் மேயராக இருந்த காலத்தில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வெற்றியையேகூட எவ்வாறு வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்பது பலவீனம்.

மேலும், தனக்கு நெருக்கமான விசுவாசிகளுக்குச் சிக்கல் வரும்போதுகூடத் துணிந்து எதிர்ப்புக் குரல் காட்ட முன்வர மாட்டார். இவருடைய தீவிர ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து நல்வாழ்வுத் துறை பறிக்கப்பட்டபோது இவரிடமிருந்து ஒரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. எந்தவொரு விஷயமானாலும், அப்பாவிடம் கேட்க வேண்டுமே, கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டால்..., நான் சொன்னால் நன்றாக இருக்குமா? என்கிற பாணியிலான இவருடைய அணுகுமுறைதான் பெரும் பலவீனங்களாக இருக்கும் என்றும் இவருடைய ஆதரவாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

``ஸ்டாலின் முதல்வராக்கப்படுவது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. கலைஞர்தான் மிகவும் தயக்கம் காட்டி வருகிறார். சரியான காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. இந்த முப்பெரும் விழாவிலாவது அறிவித்து விடுவார் என்றுதான் நம்புகிறோம்.

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலராக நீலநாராயணனும், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலராக எஸ்.எஸ். தென்னரசுவும் இருந்தனர். தென்னரசுவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அனேகமாக, ஸ்டாலினுக்கு முடிசூட்டுவது பற்றி அறிவிக்கப்படும் விழாவிலேயே தென் மாவட்ட அமைப்புச் செயலராக அழகிரிக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எல்லாம் உறுதிதான் என்றே கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கக் காலம் கனிந்துவிட்டதா? அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு அறிவிக்கப்பட்டு விடுமா? காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்களிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமான பதில்களை கலைஞரைத் தவிர வேறு யார் அறிவார்?

2 comments:

சின்னப் பையன் said...

அட.. வேகமா போற இளைஞர்களுக்கு சாலையில் வழிவிடப்படும் - அப்படின்னு சொல்ல வரும்போது நடுவிலே ஒரேஒரு வார்த்தை மிஸ்ஸாயிடுச்சு... அதுக்குப் போயி.....

Kanchana Radhakrishnan said...

போதனை மற்றவர்களுக்குத்தானா?