Sunday, August 31, 2008

கால ஓட்டத்தில் காணாமல் போனவை - விவாதமேடை

அப்போது நாங்கள் இருந்த காலனியில் கிட்டத்தட்ட 100 வீடுகள் இருக்கும்.ஒவ்வொரு வீட்டினரைப் பற்றியும் அனைத்து வீட்டினரும் அறிவார்கள்.ஒவ்வொரு வீட்டு மனையும் 2 கிரௌண்டுகள் இருக்கும்.தனித்தனி வீடுகள்.வீடு கட்டியதுப் போக எஞ்சிய நிலத்தில் வெண்டை,கத்திரி,கொத்தவரை,அவரை,புடல் என செடிகள் போட்டிருப்பார்கள்.அவரைக்கும்,புடலுக்கும் பெரிய பந்தல்.புழக்கடைப் பக்கம் கிணறு...பக்கத்தில்..துணி தோய்க்க கல்.காலை விடியும் போதே.. கிணற்றிலிருந்து பக்கெட்..பக்கெட்டாக தண்ணீர் சேந்தி..தலைக்கு குளிப்போம்.குளிக்கும் தண்ணீர் செல்லும் பாதையில் வாழை மரங்கள்.வாழையடி வாழையாக வளரும் கன்றுகள்.அருகே தானே தரையில் வளரும் பூசணிக்கொடி.
வாசலில் மல்லிகை பந்தல்,ரோஜா செடிகள்,அந்தி மந்தாரை,பவழவல்லி மரம்,குண்டுமல்லிகை..என வாசனை கும்மென்று இருக்கும்.கூடியவரை எந்த வீட்டிலும் காய்கறிகள் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள்.நமக்குப் போக மீதத்தை பகிர்ந்து , பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கும் தாராள மனது.நவராத்திரி சமயத்தில்...மாலை நேரத்தில்..கண்களுக்கு விருந்தாய்..பல வண்ண ஆடைகள் உடுத்தி வீதியில் துள்ளித் திரியும் மான்கள் (??!!) கூட்டம்..கையில் குங்குமம்..சுண்டல் பைகளுடன் பொடிசுகள்.
தீபாவளி,பொங்கல் தினங்களில்..ஒருவர் வீட்டுக்கு..ஒருவர் வருவதும்..வாழ்த்துவதும்...அடடா அந்த நாட்கள்..பொங்கல் பொங்கும் போது காலனி முழுதும் எதிரொலிக்கும்'பொங்கலோ..பொங்கல்'கூவல்...அடுத்த நாள்..மாட்டுப்பொங்கல்....பசுமாடுகள் இருக்கும் வீட்டில்..அந்த பசுவின் கொம்புகளுக்கு..வண்ணம் தீட்டி..மற்ற வீடுகளுக்கு மாலை நேரத்தில் எடுத்துச் செல்வார்கள்.நாம் பசுவிற்கு எதேனும் கொடுக்க வேண்டும்.அதுபோக..காளைமாடுகள் பூட்டிய வண்டியில்..ஜாலியாக..ஊரைச்சுற்றி ஊர்வலம் வருவார்கள்.
ஏதேனும் வீடுகளில்..அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால்...இளைஞர்கள் கூட்டம் கூடிவிடும்.இறுதி ஊர்வலத்திற்கு உடலை சுமப்பதில்..நான்..நீ...என போட்டி இருக்கும்...

ஆனால் இன்று...?

தனித்தனி வீடுகள் போய்..எங்கு பார்த்தாலும்..அடுக்கு மாடி குடியிருப்புகள்..அடுத்த ஃப்ளாட்டில் யார் இருக்கிறார் என்று தெரியாது.போதாக் குறைக்கு...தீபாவளி சமயங்களில்..காலை 6 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சட்டங்கள் வேறு.பொங்கல் அன்று..சாலமன் பாப்பையாவைப் பார்த்துக் கொண்டே குக்கர் பொங்கல்.
யார் வீட்டிலாவது...மரணம் சம்பவித்தால்..வரும் உறவு,நண்பர்கள்..எப்போது எடுப்பார்கள்? வீட்டில் மெகா சீரியல் பார்க்க நேரம் ஆச்சே என உள்ளம் பதை பதைக்க போலியாக வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் அவலம்.எங்களால் 'பாடி'யை சுமக்க முடியாது..B.P., sugar என்று கூறும் அனைத்து வயதினரும்.கடைசியில் அமரர் ஊர்தியில்..எவ்வளவு உறவு இருந்தாலும் தூக்க ஆளின்றி காடு செல்லும் பிணங்கள்.

இவற்றை எல்லாம்...பார்க்கும் போது...
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த, காணாமல் போன அந்த நாட்கள்..அந்த மனித நேயம்...திரும்ப வருமா? என்று எண்ணத் தோன்றுகிறது .

இப்படி ஒரு பதிவை போட உதவிய சிவாவிற்கு நன்றி.

இத் தொடரைத் தொடர நான் கேட்டுக் கொள்ளும் இருவர்...
ச்சின்னப்பையன்
வடகரை வேலன்

8 comments:

கோவி.கண்ணன் said...

கால ஓட்டத்தில் பசுமையாக இருப்பது நினைவுகள் தான்.

அன்றைய நாட்கள் குறித்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள் இராதா கிருஷ்ணன் ஐயா.

அன்றை நாட்களில் மிகவும் முக்கியமானவை என நான் கருதுவது, பெற்றோர்களுடன் ஒன்றாக வசித்து அவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளை வளர்த்து எடுத்தவை. தந்தையின் பெயரை நினைவு கூறும் வண்ணம் மகனுக்கு அதனை ஒட்டிய பெயரை வைப்பது, இவையெல்லாம் தற்போது நடப்பில் இல்லை.

ச்சின்னப் பையன் said...

பதிவும், நீங்கள் மிஸ் பண்ணிய அந்த நாட்களும் சூப்பர்......

kanchana Radhakrishnan said...

// கோவி.கண்ணன் said...

அன்றை நாட்களில் மிகவும் முக்கியமானவை என நான் கருதுவது, பெற்றோர்களுடன் ஒன்றாக வசித்து அவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளை வளர்த்து எடுத்தவை. தந்தையின் பெயரை நினைவு கூறும் வண்ணம் மகனுக்கு அதனை ஒட்டிய பெயரை வைப்பது, இவையெல்லாம் தற்போது நடப்பில் இல்லை.//


ஆச்ச்ரியம்..கோவி சார்...நானும் இப்பதிவில் நீங்கள் சொல்லி இருந்ததையெல்லாம் எழுதி இருந்தேன்..பிறகு பதிவிற்கு கொடுக்கப்பட்டிருந்த டைடில் 'நாளடைவில் காணாமல் போனவை" என்றிருந்ததால்...காணாமல் போய் விட்ட மனிதர்கள் பகுதியை எடுத்து விட்டேன்.
நன்றி கோவி

kanchana Radhakrishnan said...

//ச்சின்னப் பையன் said...
பதிவும், நீங்கள் மிஸ் பண்ணிய அந்த நாட்களும் சூப்பர்......//


நன்றி ச்சின்னப்பையன்..அடுத்து உங்களிடம் இருந்து சூப்பரோ..சூப்பர் பதிவை எதிர்ப் பார்க்கிறேன்

வடகரை வேலன் said...

என்னை மதித்து அழைத்ததற்கு நன்றிங்க.

உற்வினர் திருமணத்திற்கு குற்றாலம் போவதால் திரும்ப வந்து, வெள்ளிகிழமை பதிவிடுகிறேன்.

kanchana Radhakrishnan said...

//வடகரை வேலன் said...
என்னை மதித்து அழைத்ததற்கு நன்றிங்க.

உற்வினர் திருமணத்திற்கு குற்றாலம் போவதால் திரும்ப வந்து, வெள்ளிகிழமை பதிவிடுகிறேன்.//


வருகைக்கும்,அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி..வேலன்

மங்களூர் சிவா said...

அருமையா எழுதியிருக்கீங்க தொலைந்து போன மனித நேயம் பற்றி வருத்தமான விசயம்தான் :(

மங்களூரில் நான் மூன்றுவருடங்களாக ஒரு அப்பார்ட்மெண்டில் இருந்தேன் அந்த அப்பார்ட்மெண்டில் ஒருவருக்கும் என் பெயர் தெரியாது ஒருவர் பெயரும் எனக்கும் தெரியாது அந்த அளவுதான் இருக்கிறது மனித நேயம் :(((

kanchana Radhakrishnan said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி சிவா