வளர்ப்பு மகனுக்கு இப்படியொரு திருமணமா?' என்று தமிழகமே வாய்பிளந்து பார்த்தது... பி.பி.சி. உட்பட உலகத் தொலைக்காட்சி களே அதிசயித்து அந்தத் திருமணத்தை நேரடி ஒளி பரப்பு செய்தன... அது மட்டுமா?
`பார்த்தாயா உடன்பிறப்பே... இந்தப் பகட்டையும் படாடோ பத்தையும்... ஊரெல்லாம் மின் விளக்குத் தோரணம்... உடம்பெல்லாம் தங்கம் வைரம்... ஒரு திருமணத்திற்கு செலவு நூறு கோடி!' என எதிர்க்கட்சிகள் எல்லாம் எரிமலையாய்க் குமுறின...
விளைவு! ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறியது! ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்தவர்களின் வீடுகளில் சி.பி.ஐ.யின் அதிரடி சோதனை... பறிமுதல் செய்யப்பட்டவை என்று, 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பத்திரிகைகள் பட்டியல் போட்டதோடு, தொலைக்காட்சிகளும் போயஸ் தோட்டத்து சுவர்களை ஊடுருவி சுனாமியாய் சுழன்றடித்தது.
சோதனையின்போது 381 வளையல்கள், 172 கம்மல்கள், 104 மோதிரங்கள் என வியப்பு விரிந்து கொண்டே போனது...
அரசியலே சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களும் அதிசயப்பட்டனர். காலம் மாற மாற திடீரென காட்சிகளும் மாறிவிட்டன. ஆண்டுக் கணக்கில் நீண்ட அந்த வழக்கில் `பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நகைகளில் விலையுயர்ந்த இரண்டு ஒட்டியானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொழுதே மிஸ்ஸிங்' என்றும்; `நீதிமன்ற ஆவணங்களில் அவை ‘not available’என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஒட்டியானங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், அந்த ஒட்டியானங்களை கடைசியாக இரு வி.ஐ.பி.க்கள் பார்வையிட்டபின் வேறு யார் கண்ணிலும் அவை படவில்லை என்றும்' பலவிதமான பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.
ஒரு வழியாக இந்த பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியான சூழ் நிலையில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஓர் ஆழிப் பேரலை... அதை ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் வாக்குமூலங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம்!
சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் எனவும், அந்த கவரிங் நகைகள் மைசூரில் இருந்து திருமணத்திற்காக வரவழைக்கப்பட்டன எனவும், அதை மைசூரில் இருந்து ஒரு மேக்கப்மேனே எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்தபின் கையோடு அவற்றை யெல்லாம் அவர் திரும்ப எடுத்துச் சென்று விட்டதாக ஜெயலலிதாவும், சசிகலாவும் சொன்னதாகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் அந்த வாக்குமூலமாம்!
வீடு நிறைய பித்தளையே வைத்திருந்தாலும் ஒரு குண்டுமணித் தங்கம் திருடு போய்விட்டதென்றால் இருந்ததெல்லாம் தங்கம் என்று சொல்லும் இந்தக் காலத்தில் காணாமல் போனது மட்டுமல்ல நான் வைத்திருந்ததெல்லாம் பித்தளை என்பதுபோல் ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் சூட்சுமம் தெரியாமல் தலைசுற்றியது.
இதை நமக்குப் புரிய வைக்க முடியும் என்றால் அது ஒருவரால்தான் சாத்தியம்... அதனால் அவரிடம் கேட்கலாமென்று, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவைத் தொடர்பு கொண்டோம்...
வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.
சம்பந்தப்பட்டவர் பேசமாட்டார்... சட்டம் தெரிந்த ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான மோகனகிருஷ்ணனிடம் கேட்டோம்...
``பொதுவாகவே எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகளிடம் பெறப் பட்டதாக விசாரணை அதிகாரிகளால் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாக்கு மூலங்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களால் விசாரணையின் போது மறுக்கப்படும். விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பம் அவசியமில்லை.... ஆனால் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்களே தங்கள் நகையெல்லாம் கவரிங் நகை என வாக்குமூலம் அளிக்கின்றனர்.
இது, `காணாமல் போன ஒட்டியானங்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படத் தயாரில்லை. கைப்பற்றப்பட்ட மீதி நகையும் கவரிங் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு நல்லது' என நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.
எதுவாக இருந்தாலும் அரசுத் தரப்பின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்துத்தான் வழக்கின் போக்கு தெரியும்... அரசுத் தரப்பும் இரண்டு விதமாக யோசிக்கலாம்...
`ஜெயலலிதாவும் சசிகலாவும் சொல்கிற மாதிரி, இல்லை. தங்கம்தான்!'னு அவர்களின் வாக்குமூலத்தை மறுத் தால் காணாமல் போன ஒட்டியானப் பிரச்னை மீண்டும் வரலாம்.
ஒருவேளை அவர்கள் `கவரிங்'னு சொல்வதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டியானமும் கவரிங்கோடு கவரிங்காகச் சேர்ந்து பிரச்னையே இல்லாமலும் போகலாம்...
இந்த இரண்டில் எதுவேணும்னாலும் நடக்கலாம்.''
இப்படி பிரச்னையின் நோக்கம் மட்டுமல்ல போக்கும் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மோகன கிருஷ்ணன்....
வடிவேலு பாணியில் நமக்குத் தோன்றியதெல்லாம்... ஆளாளுக்கு இப்படி திருப்பித் திருப்பி விட்டர்றாங்களே... என்னதான்யா நடக்குது?.
2 comments:
அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா!!!!
அரசியல் சாதாரணங்கள்..கோர்ட்டுகளிலும் சாதாரணமாகிவிட்டதே என்ற ஆதங்கம்
Post a Comment