Saturday, August 2, 2014

குறுந்தொகை - 64



தலைவி கூற்று
(தலைவன் பிரிவை பொறுக்கமுடியா தலைவியை நோக்கி, "அவர் உன் துன்பத்தையறிவார்; ஆதலால் விரைவில் திரும்புவார்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வரவில்லையே" என்று தலைவி கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் கருவூர்க் கதப்பிள்ளை

இனி பாடல்-
 
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
   
புன்றலை மன்ற நோக்கி மாலை
   
மடக்கட் குழவி யணவந் தன்ன
   
நோயே மாகுத லறிந்தும்

சேயர் தோழி சேய்நாட் டோரே.

               - கருவூர்க் கதப்பிள்ளை

உரை-

பல பசுக்கள் நெடிய வழியில் நீங்கிச் சென்றன.அவை தங்கியிருத்தற்குரிய புல்லின் இடத்தையுடைய மன்றத்தை நோக்கி.மாலைநேரத்தில் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள், தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தையுடையேமாதலை அறிந்திருந்தும் நெடுந்தூரத்தேயுள்ள நாட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுந்தூரத்திலே உள்ளார்.


(கருத்து) தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,

 மேயச் சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் ஊருக்கு மீண்டும் வந்து தான் தங்குமிடம் புகுவது வழக்கம்; அதனால் மாலையில் கன்றுகள் தம் தாய்ப் பசுக்களை எதிர்நோக்கியிருந்தன;    பிரிந்து சென்ற பசுக்கள் மாலைக்காலத்தில் மீண்டு வருதலை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்றலைப்போல, பிரிந்து சென்ற தலைவனது வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருப்பேனென்று தலைவனுக்கு தெரிந்திருந்தும் அவர் வரவில்லையே என தலைவி வருந்துகிறாள்.

1 comment:

Tamil24x7 said...

உங்களது பதிவுகளை தமிழ்24x7.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Tamil24x7.Com

இப்படிக்கு
Tamil24x7.Com