(தோழி கூற்று)
(தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து பின்னர் அதனையும் மறுத்து தோழி, தலைவன், தலைவியைமணம் செய்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.)
குறிஞ்சி திணை- பாடலாசிரியர் பரணர்
இனி பாடல்=
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போகிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.
-பரணர்
உரை-
தலைவனது மார்பையே, நீ விரும்புதலுடையாய்.நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, அனனது நாட்டினுட்புக்க வஞ்சினத்தையுடைய கோசரைப் போல சிறிதளவு வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும் வேண்டும்.அதற்காக வருந்தாதே!
(கருத்து) பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்தால் தலைவன் விரைவில் மணந்து கொள்வான்.
(வஞ்சினம் என்பதுஇப்படிச் செய்தால் இப்படியாவேன் என சபதம் செய்வதுதாம்.)
தலைவன் நடந்து கொள்ளும் முறைக்கெல்லாம் உட்பட்டால் களவொழுக்கம் குறைவின்றி நடைபெறும்.அந்த துணிவால் அவன் தலைவியை மணம் புரிய மாட்டான்.பகலில் தலைவன் வருவதற்கும் தடை போட்டு , இரவு வருவதற்கும் தடை விதித்தால்..வேறு வழியின்றி தலைவியை மணம் புரிந்து கொள்வான்.ஆகவே இப்படி நடிக்க வேண்டியது முக்கியமாகிறது என்கிறாள் தோழி.
1 comment:
வணக்கம்
பாடலும் விளக்கமும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment