தலைவி கூற்று
(விலைமகளிடம் இருந்து பிரிந்து வந்த தலைமகனுக்குத் தூதாக வந்து, “நீ கோபப்படாதே!; அவர் அன்புடையார்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடற்குரியவரே யன்றி அளவளாவி மகிழ்தற்குரியர் அல்லர்” என்று தலைவி கூறியது.)
மருதம் திணை - பாடலாசிரியர் நன்முல்லையார்
இனி பாடல்-
நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக்
கன்னையு மத்தனு மல்லரோ தோழி
புலவியஃ தெவனோ வன்பிலங் கடையே.
-அள்ளூர் நன்முல்லையார்.
உரை _ (தோழி) நல்ல பெண்மை நலம் கெடவும், மேனியழகு மெலியவும், எல்லாவற்றினும் இனிய உயிர் நீங்கினாலும், அவர் பற்றி பரிவு ஏற்படும் சொற்களை சொல்லாதே!தலைவர் நமக்கு அன்னையும், தந்தையும் ?அல்லரோ!
தலைவன் தலைவியரிடத்து அன்பு இல்லா இடத்தில் ஊடல் எதன் பொருட்டு?
(கருத்து) தலைவன் என்பால் மனைவியென்னும் கருத்துடன் அன்பு புரிந்தானல்லன்.
(வி-ரை.) நலம் இரண்டனுள் முன்னது பெண்மை நலம்; இரண்டாவது அழகு.
அவரை ஏற்றுக்கொள்ளல் வேண்டும்” என்று தோழி கூற, “என்னுடைய நலமும் உயிரும் தொலையுமேனும் பொறுத்துக்கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளல் என் கடன்; அவர் அன்னையையும் அத்தனையும் போல உபசரிக்கத்தக்கவர்; ஆயினும் தலைவராகக் கருதி அளவளாவுவதற்குரிய அன்பு அவர்பால் இல்லை; என தலைவி கூறினாள். இவ்வயன்மைக் குறிப்பினால் வாயில் மறுத்தாளாயிற்று
No comments:
Post a Comment