Saturday, November 8, 2014

குறுந்தொகை-150



தலைவி கூற்று
(தலைவன் இரவில் தலைவியை சந்திக்க விரும்ப அதை தோழி தலைவிக்கு  தெரிவிக்க, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; அவரை அணைத்தால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் அவனை சந்திக்க சம்மதத்தைத் தெரிவித்தது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மாடலூர் கிழார்

இனி பாடல்-


சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
 
வான மீனின் வயின்வயி னிமைக்கும்
 
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
 
உள்ளி னுண்ணோய் மல்கும்
 
புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்.

                            -மாடலூர் கிழார்.

  உரை-

தோழி...மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நன்மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல இடந்தோறும் ஒளியை வீசும் ஓங்கிய மலைநாட்டையுடைய
தலைவனது பூசிய சந்தனம் வீசும் மார்பினை, நான் நினைத்தால் என் உள்ளத்தில் காமநோய் பெருகும்.அம்மார்பை நான் அணைத்தால் அந்நோய் இல்லையாதல் ஆச்சரியிமான ஒன்று.

     (கருத்து) தலைவனைக் கண்டு அளவளாவினாலன்றி என் நோய் தீர்வதில்லை.

   

No comments: