Tuesday, November 11, 2014

குறுந்தொகை-152



(தலைவன் நெடுங்காலம் வராது இருந்தமையால் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கிளி மங்கலங்கிழார்

இனி பாடல்-
   
யாவது மறிகிலர் கழறு வோரே
   
தாயின் முட்டை போலவுட் கிடந்து
   
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ

   
யாமைப் பார்ப்பி னன்ன

காமங் காதலர் கையற விடினே.

                   -கிளி மங்கலங்கிழார்

உரை-

தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது,அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலியினன்றி வேறு என்ன உறுதியை உடையது? என்னை இடித்துரைப்போர் இதனைச் சிறிதேனும் அறிந்திலர்..


(கருத்து) தலைவர் விரைவில் வராவிடின் காமம் பயனற்றுக் கெடும்.

     (வி-ரை.) விரைவில் வந்து தன்னை மணப்பதற்கான முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல் தன்னைக் கடிந்த தோழியை வேறுபடுத்திப் படர்க்கையாற் கூறினாள்; முன்னிலைக் கண் உள்ள தோழிக்குப் படர்க்கையாற் குறிப்பாக உணர்த்தினமையின் இது முன்னிலைப் புறமொழி).

    கழறுதல் - இடித்துரைத்தல்.

     தாயில்லாத முட்டை அத்தாயால் இடப்பட்டும் அடுத்தடுத்துப் பாதுகாத்தலை இழப்பதால் குஞ்சாகும் பயனைப் பெறாதது போல, தலைவனால் உண்டான காமம் அவன் அவளை மணந்து உடன் வாழாமையால் இல்லறப் பயனைப் பெறாததாகிறது..


No comments: