Wednesday, November 12, 2014

குறுந்தொகை-153


தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்காது நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை-பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

குன்றக் கூகை குழறினு முன்றிற்
   
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
   
அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே
   
ஆரிருட் கங்கு லவர்வயிற்

சார னீளிடைச் செலவா னாதே.

                            -கபிலர்

உரை-

என் நெஞ்சம்- குன்றிலுள்ள பேராந்தை ஒலித்தாலும், முற்றத்திலுள்ள பலாமரத்தினது பெரிய கிளையினிடத்து ஆண் குரங்கு தாவித் துள்ளினாலும் அச்சத்தை முன்பு அடையும். அது கழிந்தது. இப்பொழுது செல்லுதற்கரிய இருளையுடைய இருளில் அவரிடத்தே மலைச்சாரற் கண்ணுள்ள நெடுவழியில் செல்லுதலை நீங்காது.அது இரங்குதற்குரியது.


   
 கருத்து- தலைவர் இரவில் வருதலின், ஆற்றின் ஏதம் அஞ்சி வருந்துகின்றேன்,

No comments: