தலைவி கூற்று
(பூப்பு எய்திய தலைமகள் அதனை மறைத்துக் கூறுவாளாய், “வைகறை வந்தது; இனித் தலைவனைப் பிரியநேருமென்று அஞ்சுகின்றேன்” என்று சொல்லியது.)
மருதம் திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்மூலன்
இனி பாடல்-
.
குக்கூ வென்றது கோழி யதனெதிர்
துட்கென் றன்றென் றூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.
-. அள்ளூர் நன்மூலன்.
உரை-
கோழி ,குக்கூ என்று கூவியது.அதற்கு நேரே எனது தோளை மணந்த தலைவரை பிரியச் செய்யும் வாளைப்போல விடியற் பொழுது வந்ததென்று எனது குற்றமற்ற நெஞ்சம் அச்சத்தை அடைந்தது
(கருத்து) தலைவனை இனிப் பிரிந்திருத்தல் வேண்டுமென்று அஞ்சுகின்றேன்.
(தலைவிதான் பூப்பெய்தியதை வெளிப்படையாகக் கூறாதொழிந்தாள். துட்கென்றன்று - துட்கென்றது; துட்கு - அச்சம். தலைவனோடு ஒன்றுபட்டுப் பிறிதொரு நினைவின்றி யமைந்ததாதலின் தூய நெஞ்சாயிற்று.
பூப்புக்காலமாகிய மூன்றுநாளும் தலைவியினதுசொற்கேட்கும் அணிமையிலிருத்தலையன்றி அளவளாவுதல் அறநெறியன்றாதலின் பூப்பு, தலைவனைத் தோள் தோயாமற் பிரிப்பதாயிற்று;)
No comments:
Post a Comment