தலைவன் கூற்று
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)
குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்
இனி பாடல்-
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே.
.
-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.
உரை-
செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும், விரத உணவையுமுடைய வேதத்தையறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்த தலைவியரையும், தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய பரிகாரமும் உள்ளதா.இது மயக்கத்தால் வந்ததாகும்
(கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.
(பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று).
No comments:
Post a Comment