தலைவி கூற்று
(தலைவன் இரவுக்காலத்தில் வந்து அளவளாவுங்காலத்து ஒரு நாள் பெருமழை உண்டாயிற்றாக, அவனது வரவுக்குத் தடை நிகழுமோவென அஞ்சிய தலைவி அவ்வச்சத்தைத் தலைவன் வந்த பின்னர் அம்மழையை நோக்கிக் கூறுவாளாய் அவன் கேட்பக் கூறியது.)
குறிஞ்சி திணை- பாடலாசிரியர் ஔவையார்
இனி பாடல்-
நெடுவரை மருங்கிற் பாம்புபட விடிக்கும்
கடுவிசை யுருமின் கழறுகுர லளைஇக்
காலொடு வந்த கமஞ்சூன் மாமழை
ஆரளி யிலையோ நீயே பேரிசை
இமயமுந் துளக்கும் பண்பினை
துணையில ரளியர் பெண்டிரிஃ தெவனே.
-ஒளவையார்.
உரை-
ஊயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள,பாம்புகள் படம் எடுக்கின்ற மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது இடிக்கும் முழக்கத்துடன் கலந்து காற்றோடு வந்த நிறைந்த நீராகிய சூழையுடைய பெரிய மழையே, இயல்பாகவே உன்னிடம் நிறைந்த இரக்கத்தைநீ இப்போழுது பெறவில்லையோ?பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கின்ற தன்மையினையுடையாய், நின்னால் அலைக்கப்படும் மகளிர் துணைவரை பெற்றிலர்.ஆதலின், இரங்கத்தக்கார்.இங்கனம் நீ பெய்து அலைத்தல் எதன் பொருட்டு?
(கருத்து) இதுகாறும் தலைவர் வாராமையின் இப்பெருமழையினால் அவர் வரவு தடைப்படுமோ வென்று அஞ்சினேன்.
(வி-ரை.) தலைவன் பெருமழையினால் துன்புறுவானோ வென்றும் வாரானோ வென்றும் அஞ்சிய தலைமகள் தான் அங்ஙனம் அஞ்சியதை இதனால் தலைவனுக்கு உணர்த்தினாள்.
No comments:
Post a Comment