Monday, November 10, 2014

குறுந்தொகை-151


தலைவன் கூற்று
(பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்”என்று கூறித் தலைவன் வருந்தியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் தூங்கலோரி

இனி பாடல்-


வங்காக் கடந்த செங்காற் பேடை
   
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
   
குழலிசைக் குரல குறும்பல வகவும்
   
குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது

மறப்பருங் காதலி யொழிய
   
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.


                                -தூங்கலோரி.

     உரை-

நெஞ்சே! ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த சிவந்த கால்களையுடைய பெண் பறவை ,புல்லூறென்னும் பறவை தன்னிடம் இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக தம்முடைய கணவனாகிய ஆண் பறவையைக் காணாமல் வேய்ங்குழலினிது இசையைப் போன்ற குரல்களை உடையவனாய் குறிய பல ஒலிகளால் அழைக்கும் குன்றைப் பொருந்திய சிறிய வழிகள் கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல் மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க நான் செல்வேனென்று துணிவது இங்கே நம் இளமைப் பருவத்திற்கு முடிவாகும்.



     (கருத்து) இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.


     இளமைக் காலத்தே தலைவியோடிருந்து இன்புற வேண்டும்; பொருள் தேடச் சென்றால் அது முற்றும் வரையில் பிரிவு நேர்வதால் அதற்குள் இளமை கழியும்; இளமை கழியுமேல் அவ்வின்பம் கைகூடாதென்று கருதியவனாதலின், இறப்பலென்பது இளமைக்கு முடிவென்றான்.

No comments: