Wednesday, March 4, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் -69

திட்டமிட்டு செயல் படுவோமாக!


அறிவுடைமை எனும் அதிகாரத்தில் "அறிவுடையவர்களுக்கு  ஒர் திறமை இருக்கிறது "என்கிறார் வள்ளுவர்.

அது என்ன திறமை

 அவர்கள் வருவதை முன்பே அறிந்து கொள்வார்கள். அது மட்டும் அல்ல, அப்படி அறிந்து கொள்வதால், அவர்களுக்கு அதிர்ச்சி அடையும்படி ஒரு துன்பம் வராது.

வரும் துன்பத்தை முன்பே அறிந்து கொண்டு அதில் இருந்து தங்களை காத்துக் கொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்கிறார் வள்ளுவர்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய் (429)

பெரும்பாலோர், ஒரு காரியத்தை செய்யும் போது, அதனால் துன்பம் உண்டாகுமா? என சிந்திப்பதில்லை.அப்படி பின்னால் துன்பம் ஏற்படின்..பதற்றமும், பிறர் உதவியை நாடுதலும், தேவையில்லா கோபமும், இறைவா..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று இறைவனை வேண்டுதலும் செய்வார்கள்.

ஆனால், அறிவுள்ளவர்கள் அப்படி செய்யமாட்டார்களாம்.துன்பம் வரும் முன்னரே அதை எதிர்பார்த்து அது வராமல் இருக்கும் வழிகளை மேற்கொள்வார்களாம்.


அடுத்த "குற்றங்கடிதல்" அதிகாரத்தில் சொல்கிறார்..

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (430)

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போலக் கெடும்.

திட்டமிட்டு செயல் படுவோமாக!

No comments: