Monday, March 9, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 74


நீரின்றி அமையாது உலகு
---------------------------------------
ஒரு நாடு நல்ல வளத்தோடும், செழிப்போடும் விளங்குகிறதென்றால்..அந்நாட்டில் நீர் வளம் சிறப்பாக இருப்பதும் ஒரு காரணமாகும்.அப்படி நல்ல நீர்வளம் அமைய காலத்தே தவறாது மழை பொழிதல் அவசியமாகும்.

மழைநீர் பொய்த்து விட்டால்..

வறுமை, பசி,பஞ்சம் வாட்டும்.உழவுத் தொழில் குன்றும்.உயிர்கள் செத்து மடியும்.

வாழ்வு சிறக்க மழையின் பங்கு அதிகம் என்பதாலோ என்னவோ..வள்ளுவரும், திருக்குறளில் கடவுள் வாழ்த்திற்கு அடுத்த அதிகாரமாக வான்சிறப்பை வைத்தார்.

கடல்நீர் ஆவியாகி..அந்தக் கடலில் மழையாக பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்.மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும் என்கிறார் இக்குறளில்..

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)

மேலும் சொல்கிறார்..

உலகில் மழையில்லை என்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்னும் நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு (20)

நீரின் இன்றியமையாமையை உணர்வோமாக. 

No comments: