Monday, September 8, 2014

குறுந்தொகை- 100



தலைவன் கூற்று
(தலைவன் பாங்கனுக்கு, “நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்; அவள் பெறுதற்கரியள்” என்று கூறியது.)


 குறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
 
அருவிப்பரப்பி னைவனம் வித்திப்
   
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
   
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
   
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்

வல்வில் லோரி கொல்லிக் குடவரைப்
   
பாவையின் மடவந் தனளே
   
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.

                              -கபிலர்

   உரை-

அருவு பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையில் களையாக முளைத்த பருத்த இலையையுடைய மலை மல்லிகையோடு, பசிய மரலை களைந்தெறியும் காந்தளையே இயற்கை வேலியாகயுடைய சிற்றூரிலுள்ளார்..உணவின்றி பசித்தாராயின் தறுகண்மையையுடைய யானையினது கொம்பை விற்று அப்பணத்தில் வரும் உணவை உண்ணுதற்கிடமாகிய வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள பாவையைப்போல நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள் ஆயினும் அவளுடைய மூங்கிலைப் போன்ற பெரிய தோள்கள் தழுவதற்கு அரியனவாகும்.



    (கருத்து) என் மனங்கவர்ந்த தலைவி பெறுதற்கரியள்.

     (நான் அவளைக் கண்டு படும் துயரத்தை அறியாத ஒன்றும் அறியாத அவள் பெறுதற்கரியவள்)

No comments: