Tuesday, September 23, 2014

குறுந்தொகை-113



தோழி கூற்று
(பகல் நேரத்தில் வந்து அளவளாவிய தலைவனுக்குத் தாம் பயிலும் இடத்தை மாற்றி வேறிடங்கூறுவாளாய், “தலைவி காட்டாற்றங் கரையிலுள்ள பொழிலுக்கு எம்முடன் வருவாள்” என்று அங்கு வரும் வண்ணம் குறிப்பாகத் தோழி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் மாதிரத்தன்

இனி பாடல்-
 
ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச்
 
சேய்த்து மன்றே சிறுகான் யாறே
 
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
 
துன்னலபோ கின்றாற் பொழிலே யாமெம்

கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
 
ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே.

                   -மாதிரத்தன்


உரை-

(தலைவா) பொய்கை ஊருக்கும் அருகிலுள்ளது சிறிய காட்டாறு, அப்பொய்கைக்கும் அருகிலே உள்ள சோலை.அப்பொய்கையிலும்,ஆற்றிலும் உணவைத் தேடும் வெள்ளிய நாரைகளை அன்றி வேறு எந்த உயிரும் நெருங்காது ஒழியும்.நாங்கள் எங்கள் கூந்தலுக்கு இட்டுப் பிசையும் பொருட்டு எருமண்னை கொணர அங்கு செல்வோம்.பெரியபேதமையையுடைய தலைவி அங்கும் வருவாள்.


    (கருத்து) பொய்கைக்கு அணித்தாகிய காட்டாற்றின் கரையிலுள்ள பொழிலகத்தே தலைவியைக் கண்டு பேசலாம்

No comments: