Monday, September 29, 2014

குறுந்தொகை -119



தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து மீண்ட தலைமகனது வேறுபாடு கண்ட பாங்கன், “நினக்கு இஃது எற்றினான் ஆயிற்று?” என்றவழி, “ஓர் இளைய மகளால் ஆயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் சத்தி நாதனார்

இனி பாடல்-

   
சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை
   
கான யானை யணங்கி யாஅங்
   
கிளையண் முளைவா ளெயிற்றள்
   
வளையுடைக் கையளெம் மணங்கி யோளே.


                                   -சத்தி நாதனார்

உரை-

இளமையை உடையவளும், நாணல் முளையைப் போன்ற ஒளியையுடைய பற்களை உடையவளும், வளையினை உடைய கையினை உடையவளுமாகிய ஒருத்தி, வெள்ளிய பாம்பினது அழகிய கோடுகளையுடைய குட்டியானது காட்டுயானையை வருத்தினாற் போல எம்மை வருந்தச் செய்தனள்.



     (கருத்து) ஓர் இளைய மகள் என்னைத் தன் அழகினால் வருத்தினாள்.

(வெள்ளிய பாம்பு_ கோதுமை நாகம்.,


     இளைய பாம்புக்குட்டியானது, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள் 

No comments: