தலைவி கூற்று
(தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.)
முல்லை திணை - பாடலாசிரியர்
இனி பாடல் -
.
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே
யானே மருள்வேன் றோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலைத் தத்தக்
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.
-கந்தக் கண்ணன்
உரை-
(தோழி) பெரிய தண்மையையுடைய மழைகாலத்துக்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன.அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்.ஆயினும், என்னைப் பிரிந்தவராகிய இன்னும் என்னிடம் வந்து சேராமல் இருக்கும் தலைவர் அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி தொகுதியாகிய பெரிய மேகத்தினது முழங்கும் ஓசையை நடுஇரவில் கேட்டால் தான் பிரிவினால் வருந்துவதன்றி மீண்டும் எந்த நிலையை உடையவராவாரோ?
(கருத்து) தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?
No comments:
Post a Comment