Tuesday, September 16, 2014

குறுந்தொகை- 107


தலைவி கூற்று
(பொருளீட்ட பிரிந்த தலைவன் மீண்டும் வரப்பெற்று அவனோடு இன்புற்ற தலைவி பொழுது புலர்ந்தமையால் துயருற்று, “எம்மைத் துயிலினின்றும் எழுப்பிய சேவலே! நீ இறந்து படுவாயாக” என்று கூறித் தன் காமமிகுதியைப் புலப்படுத்தியது.)


 மருதம் திணை- பாடலாசிரியர் மதுரைக் கண்ணனார்

இனி பாடல்-

 
குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன
   
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
   
நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்
   
பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்
   
யாண ரூரன் றன்னொடு வதிந்த்
   
ஏம வின்றுயி லெடுப்பி யோயே.

                           - மதுரைக் கண்ணனார்


உரை-

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளினது ஒள்ளீய பூவைப் போன்ற தொக்க சிவந்த கொண்டையையுடைய கூட்டங்கொண்ட சேவலே, ஆழமாகிய நீரில் உண்டாகும் புது வருவாயையுடைய ஊரையுடைய தலைவனுடன் தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலினின்றும் எம்மை எழுப்பினை..இருள் பிரியா இரவில்.(ஆதலால்) வீட்டிலுள்ள எலிகளை உண்ணூம் பொருட்டு அலையும் காட்டுப் பூனையின் குட்டிக்கு சிலநாள் வைத்திருந்து உண்ணும் உணவாகை..மிக்க துன்பத்தை அடைவாயாக!




     (கருத்து) பொழுது புலர்ந்தமையால் நான் துன்புறுவேனாயினேன்.

(தலைவி காம மயக்கத்தில் இருக்கையில், பொழுது புலர்ந்ததென்று உணர்த்திய சேவல் தவறாக உணர்த்தியது போல இருந்தமையால் இப்படிக் கூறுகிறாள்

.

No comments: