தலைவி கூற்று
(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் இருப்ப, தலைவி அவன் வரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்குவாளாய் மாலைப் பொழுதில், “இன்னும் வந்திலர்” என்று கூறி வருந்தியது.)
நெய்தல் திணை - பாடலாசிரியர் நன்னாகையார்
இனி பாடல்-
புள்ளு மாவும் புலம்பொடு வதிய்
நள்ளென வந்த நாரின் மாலைப்
பலர்புகு வாயி லடைப்பக் கடவுநர்
வருவீ ருளீரோ வெனவும்
வாரார் தோழிநங் காத லோரே.
-நன்னாகையார்
உரை-
(தோழி) பறவைகளும், விலங்குகளும் தனிமையோடு தங்க , நள்ளென்னும் ஓசைபட வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில் பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி வினாவுவார் உள்ளே வருவீர் இருக்கின்றனிரோ! என்று கேட்கவும் நம் தலைவர் வாரார் ஆயினர்.
.
(கருத்து) நம் தலைவர் இன்றும் வந்திலர்.
( தனக்குத் துன்பம் பயப்பதுபற்றி மாலையை நாரின் மாலையென்றாள், தன் வீட்டில் விருந்தினர் பலர் வந்து உண்ணுவாராதலின் அவர் தடையின்றிப் புகும் வாயிலைப் பலர் புகுவாயிலென்றாள். இராக் காலத்தில் விருந்தினர்களைப் புகவிட்டுப் பின்னும் எவரேனும் உள்ளாரோ என ஆராய்வாராகி ஏவலாளர்கள் வினவி, ஒருவரும் இலராக வாயிற்கதவை அடைத்தனர். தலைவன் வந்திருப்பின் விருந்தினர் கூட்டத்தில் ஒருவனாகப் புகுவான் அவன் அங்ஙனம் புகவில்லை ஆதலின், அவர் வந்திலரென்று தலைவி கூறினாள்.)
No comments:
Post a Comment