Saturday, September 6, 2014

குறுந்தொகை-98



தலைவி கூற்று
(தலைவன் தான் கூறிச்சென்ற பருவத்தில் வராததால் வருந்திய தலைவி, “யான் பசலையுற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுறுத்தினால் நலமாகும்” என்று தோழிக்குக் கூறியது)

முல்லை திணை - பாடலாசிரியர் கோக்குளமுற்றன்

இனி பாடல்-

 
இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த்
   
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
   
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
 
நீர்வார் பைம்புதற் கலித்த

மாரிப் பீரத் தலர்சில கொண்டே.

                      -கோக்குளமுற்றன்

உரை-

(தோழி) நம் தோட்டத்திலுள்ள நீர் ஒழுகுகின்ற பசிய புதரினிடத்தே தழைத்துப் படர்ந்த மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றைக் கொண்டு தலைவரை நெருங்கச் சென்று நல்ல நெற்றியையுடைய தலைவி இம்மலரைப் போன்ற பசலையை அடைந்தாள் என்று அவரிடம் சொல்லுவாரைப் பெற்றால் மிக்க உதவியாக இருக்கும்.



    (கருத்து) நான் பசலை நோயடந்ததை தலைவர் அறிந்திலர்; அறியின்  வருவார் போலும்!



    (தலைவன் பொருளீட்டும் பொருட்டு பிரிந்துள்ளான். அவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தகாலத்தில் அவன் வராததால்  வருந்திய தலைவி “தலைவரது பிரிவினால் நான் பசலைபெற்றேன்; என் மேனி அழகு அழிந்தது. அவர் என் நிலையை அறியார் போலும்! யாரேனும் அவர் உள்ள இடத்திற்குச் சென்று ‘உன் பிரிவினால் தலைவி நலனிழந்து பசலையுற்றாள்; நீ கூறிய பருவமும் வந்தது’ என்று நினைவுறுத்தினால் அவர் விரைந்து வந்து மணந்து கொள்வார்” என்று கூறினாள்.)

No comments: