Saturday, September 20, 2014

குறுந்தொகை - 111




தோழி கூற்று
(தலைவன் வேலிப்புறத்தானாக அவனுக்குப் புலப்படும்படி தோழி, “நின்மேனியின் வேறுபாடு கண்டு அன்னை வெறியாடத் தொடங்கினாள். அவ் வேறுபாடு நீங்குதற்குரிய வழி வெறியாடலன்றென்பதைத் தாய் அறியும் பொருட்டுத் தலைவன் இங்கே வந்து செல்லுதல் நலம்” என்று தலைவியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் தீன்மிது நாகன்

இனி பாடல்-
 
மென்றோ ணெகிழ்த்த செல்லல் வேலன்
   
வென்றி நெடுவே ளென்னு மன்னையும்
   
அதுவென வுணரு மாயி னாயிடைக்
   
கூழை யிரும்பிடிக் கைகரந் தன்ன

கேழிருந் துறுகற் கெழுமலை நாடன்
   
வல்லே வருக தோழிநம்
   
இல்லோர் பெருநகை காணிய சிறிதே.

                       - தீன்மதி நாகன்

உரை-

(தோழி) மெல்லிய தோளை மெலியச் செய்த துன்பம் வெறியாட்டாளன், வெற்றியையுடைய நெடிய முருகக் கடவுளால் வந்ததென்று சொல்வான்.நம் தாயும் அதுவென நினைப்பாளாயின் அப்போது கருமையான பெண் யானையினது கை மறைந்தாற் போன்ற கரி நிறத்தையுடைய பெரிய குண்டுக்கல் பொருந்திய மலைநாட்டையுடைய தலைவன் நம வீட்டிலுள்ளாரது பெரிய நகைக்கிடமான செய்கையை காணும் பொருட்டு சிறிது நேரமிங்கு விரைந்து வந்து செல்வானாக!


     (கருத்து) தாய் நின் வேறுபாடு கண்டு வெறியெடுத்தலைத் தலைவன் அறிவானாக.



 சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு, “தலைவன் இன்னும் வரைந்து கொள்ளாமையால் தலைவி துன்புற்றாள்; அவளுடைய அகத்துன்பம் புறத்தாருக்குப் புலனாகும்படி அவள் தோள்கள் நெகிழ்ந்தன. அதுகண்டு தாய் வெறியாட்டெடுக்க எண்ணியுள்ளாள்” என்பதைப் புலப்படுத்தினாளாயிற்று. தலைவன் இதனை யுணர்ந்து விரைவில் வரைந்து கொள்ளுதல் இதன் பயன்.

No comments: